தேனி, மே 20: தேனி புது பஸ் நிலையத்தில் பழுதான ஹைமாஸ் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி பைபாஸ் ரோட்டில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 7.35 ஏக்கர் நிலத்தில் ரூ.13 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து கம்பம், போடி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், மூணாறு, குமுளி உள்ளிட்ட கேரள மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதன்காரணமாக தேனி புதிய பஸ் நிலையத்தில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். பஸ் நிலைய வளாகத்தில் 3 ஹைமாஸ் மின்விளக்குகள் உள்பட 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் இந்த மின்விளக்குகள் எரிந்தால் மட்டுமே பஸ் நிலையத்தில் வெளிச்சம் பரவி நிற்கும். சுற்றிலும் வனத்துறையின் காப்புக்காடுகள் உள்ள நிலையில், இரவு நேரத்தில் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களை தடுக்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், கடந்த 6 மாதமாக இங்குள்ள ஹைமாஸ் விளக்குகள் முழுமையாக எரியாமல் பழுடைந்துள்ளன. அதே போல் பெரும்பாலான மின் விளக்குகளும் எரிவதில்லை. இதன்காரணமாக பஸ் நிலையம் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வழிப்பறி சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு, பழுதடைந்த ஹைமாஸ் விளக்குகளையும் மற்ற மின் விளக்குகளையும் சரி செய்து இரவு நேரங்களில் ஹைமாஸ் விளக்குகள் மற்றும் மின்விளக்குகள் எரிவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
The post தேனி புது பஸ் நிலையத்தில் பழுதான ஹைமாஸ் விளக்குகளை சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.