×

தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின

தேனி : தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டம் தற்போது குளிர்ச்சியான சூழலை அடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் மாலை, இரவு நேரங்களில் மாறி, மாறி மழை பெய்து வருகிறது. நேற்று தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு நிலவரம் வருமாறு: ஆண்டிபட்டியில் 2.8 மிமீ, அரண்மனைப்புதூரில் 1.6 மிமீ, வீரபாண்டியில் 12.4 மிமீ, பெரியகுளத்தில் 25 மிமீ, மஞ்சளாறில் 13 மிமீ, சோத்துப்பாறையில் 36 மிமீ, போடியில் 7.2 மிமீ, உத்தமபாளையத்தில் 1.8 மிமீ, கூடலூரில் 1.2 மிமீ, பெரியாறு அணையில் 5.4 மிமீ, சண்முகநதியில் 2 மிமீ என மழை பதிவாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகநதி அணை மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் என ஐந்து மாவட்ட மக்களுக்கான நீராதாரமாக விளங்கும் முல்லைபெரியாறு அணை ஆகிய அணைகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்து வருகின்றன.

அணைகளின் நிலவரம்:முல்லைப்பெரியாறு அணையில் மொத்தமுள்ள 142 அடி உயரத்தில் தற்போது 124.95 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2022 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையில் மொத்தமுள்ள 57 அடி உயரத்தில் தற்போது 55 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 184 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 184 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சோத்துப்பாறை அணையில் அதன் மொத்த உயரமான 126.28 உயரத்தில் தற்போது அணையில் 126.28 அடி உயரத்தை முழுமையாக அடைந்து அணையில் இருந்து நீர் வழிந்தோடி வருகிறது. அணைக்கு வினாடிக்கு 357.81 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வருகிற அனைத்து நீரும் அணையின் மேல் இருந்து முழுமையாக வழிந்தோடி வருகிறது. இதனால் வராகநதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். வராக நதி, மஞ்சளாறு பகுதிகளில் கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

சண்முகநதியில் மொத்தமுள்ள 52.55 அடி உயரத்தில் தற்போது 52.56 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர்வெளியேற்றம் இல்லை.இதேபோல தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநில கோட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு வடிநில கோட்ட துறை நிர்வாகத்தின் கீழும், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கீழும் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்கள் முழுமையாக நிரம்பி உள்ளது.

தேனி நகரில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாய் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதேபோல தேனி அருகே லட்சுமிபுரத்தில் உள்ள கண்மாய் முழுமையாக நிரம்பி கண்மாயில் இருந்து மறுகால்பாய்வதை இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் வாகனங்களில் செல்வோர் நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

The post தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,Dinakaran ,
× RELATED இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழியை...