×

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?
– பார்கவி, ராமநாதபுரம்.

சூரிய குலத்து அரசர் திரிசங்கு. அவர் உடம்போடு சொர்க்கம் போக விரும்பி, குல குருவான வசிஷ்டரிடம் சொல்லி அதற்கு உண்டானவைகளைச் செய்யச் சொன்னார். ‘‘அது சுலபமல்ல; நடக்காது’’ என அறிவுரை சொன்னார் வசிஷ்டர். அதனால் வசிஷ்டரிடம் கோபம் கொண்ட திரிசங்கு, அவரை அவமானப் படுத்தி சாபம் பெற்றார். அதன்பின் திரிசங்கு, விசுவாமித்திரரிடம் போய் நடந்ததைச் சொல்ல, அவர் தன் தவசக்தியால் திரி சங்குவை, உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்பினார். தேவர்களோ, ‘‘இது முறையற்ற செயல்’’ என்று சொல்லி, திரிசங்குவைக் கீழே தள்ளினார்கள். திரிசங்கு அலறியபடியே கீழே விழ, அவரை அப்படியே ஆகாயத்தில் தடுத்து நிறுத்தி, ஒரு புது சொர்க்கத்தையே உருவாக்கினார் விசுவாமித்திரர். அது `திரிசங்கு சொர்க்கம்’ எனப்படுகிறது. மேலும் இல்லாமல், கீழும் இல்லாமல், அவாந்தரமாக – அந்தரத்தில், எந்த விதமான உதவியும் இல்லாமல் இருப்பது – திரிசங்கு சொர்க்கம்.

பஞ்ச கவ்யம் என்றால் என்ன? அதைப்பற்றிய விளக்கம் தேவை?
– ஸ்ரீனிவாசன், சென்னை.

சிவபெருமானுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களில் மிகவும் முக்கியமானது, `பஞ்ச கவ்யம்’. ‘ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் தொழும் தானந்தம் இல்லாத்தலைவன்’ – எனத் திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருக்கிறார். சிவபெருமான் அபிஷேகத்திற்கு உண்டான அந்த ஐந்தும் பசுவிடம் இருந்து பெறப்படுகின்றன. பசுவின் ஜலம்; பசுஞ்சாணம்; பசும்பால்; பசும்தயிர், பசும் நெய் எனும் ஐந்தும் சேர்ந்தது-பஞ்ச கவ்யம். கோ ஜலத்திற்கு வருணனும்; பசுஞ்சாணத்திற்கு அக்கினியும்; பாலிற்குச் சந்திரனும்; தயிருக்கு வாயுவும்; நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள்-என ஞானநூல்கள் கூறுகின்றன. கூடவே அந்நூல்கள் சொல்லும் தகவல் விவரம்: சிவப்பு நிறப் பசுவிடம்-கோ ஜலம்; வெள்ளைப் பசுவிடம்-சாணம்; பொன் நிறப் பசுவிடம்-பால்; நீலநிறப்பசுவிடம்-தயிர்; காராம் பசுவிடம்-நெய்; எனக் கொள்வது மிகவும் விசேஷம்; சிறப்பு!

தர்ப்பணம் செய்யும்போது சிலர் எள்ளோடு அட்சதையும் சேர்த்துக் கொள்கின்றார்களே?
– விஸ்வநாதன், திருப்பூர்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமை மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் சில நேரங்களில் தர்ப்பணம் செய்ய வேண்டி வரும். அப்போது எள்ளோடு அட்சதையும் சேர்த்துக் கொள்வார்கள். சிலர் வீட்டில் கல்யாணம் காட்சி என்று சுப காரியங்கள் வைத்திருப்பார்கள். நடுவில் சிராத்தம் வந்துவிடும். தர்ப்பணம் வந்துவிடும். அப்பொழுது எள்ளும் அட்சதையும் சேர்த்து வைத்து செய்வார்கள். இன்னும் சிலபேர் சுப காரியங்களுக்கு முன்னால் வந்தால் சிரார்த்தம் செய்ய மாட்டார்கள். அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள். அமங்களம் என்று கருதுவார்கள். இது சரியல்ல. நம் வீட்டு விசேஷத்தில் நம்மை நம்பி வருகின்ற நம்முடைய முன்னோர்களுக்கு சாப்பாடு போடாமல்
அனுப்புவதைப் போல.இன்னும் சொல்லப்போனால் சுப காரியங்களுக்கு முன் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதற்கு நாந்தி சிராத்தம் என்று பெயர். ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். வீட்டில் சுப காரியங்களுக்கு முன் இரண்டு வழிபாடுகள் கட்டாயம் செய்ய வேண்டும். ஒன்று குலதெய்வ வழிபாடு. இரண்டாவது நாந்தி வழிபாடு.

முருகப் பெருமான் ஆலயங்களில் காவடி சுமந்து சென்று, பக்தர்கள் வழிபடுவதன் ஐதீகம் என்ன?
– வாஸன், பரமக்குடி.

காவடி – கா அடி! ‘‘முருகப்பெருமானே! உன் திருவடிகளில் வந்து விழுந்திருக்கும் என்னைக் காப்பாற்று!’’ என்பதற்காகவே, காவடி எடுக்கப்படுகிறது. காவடியில் முன்னும் பின்னுமாக இரு பகுதிகள் உண்டு. அவற்றில் முன்பகுதி, நாம் செய்த புண்ணியம். அது தெய்வத்திடம் நம்மை இழுத்துச் செல்கிறது. பின் பக்கம் இருக்கும் பகுதி நம்முடைய பாவம். அது நம்மைப் பின்னால் இழுக்கிறது. முயன்று, முயற்சிசெய்து போய், நாம் தெய்வ அருளைப் பெறுகிறோம். இதுவே காவடியின் ஐதீகம். இடும்பன் மூலமாக வந்தது, இந்தக் காவடி சுமக்கும் ஐதீகம்.

 

The post திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Tags : Trinity ,Bhargavi ,Ramanathapuram ,Surya ,Trisangu ,Vasishtha ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’