×

ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்

கிருஷ்ணகிரி, மே 17: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சியினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்ப அயற்சியினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க அதிக வெயில் நேரத்தில் பசுக்களை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. வெயில் சுட்டெரிக்கும்போது, மேய்ச்சலுக்காக கால்நடைகளை அதிக தூரம் அழைத்துச் செல்லக்கூடாது.

மர நிழலில் தான் கட்டி வைக்க வேண்டும். உயரமான கொட்டகைகளில் கட்டி வைத்தால், காற்றோட்டமாக இருக்கும், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பசுக்களை மேய்க்கலாம்.மேலும், பசுக்களுக்கு அரிசி கஞ்சி வைப்பதை தவிர்க்க வேண்டும். போதுமான அளவு சுத்தமான குடிநீர் அவ்வப்போது வைக்க வேண்டும்.

அதிகாலையிலும், மாலையிலும் பசுந்தீவனம் வழங்கலாம். தினமும் 40 கிராம் தாது உப்பு கலவையை பசுக்களுக்கு வழங்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாம். எப்போதும் கொட்டகை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் ஈக்கள் உற்பத்தியாவது குறையும். அதேபோல், கோடை காலத்தில் கோழிகளுக்கு அதிகாலை பொழுதிலும், இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள், பி.காம்ப்ளக்ஸ் குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.

கோழிகளை பொறுத்தவரை, அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து, குறைவான எண்ணிக்கையில் பராமரிக்க வேண்டும். கொட்டகையின் பக்கவாட்டி கோணிப்பைகளை கட்டி வைத்து நீர் தெளிப்பதன் மூலம் வெப்பம் உட்புகாமல் தடுக்க முடியும். ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை உரிய காலத்தில் போடப்பட வேண்டும். ஆடுகளுக்கு பட்டிகளில் உப்பு கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் எளிதாக கிடைக்கும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க கருவேல் உலர்காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

மேலும், செல்லப்பிராணிகளை காரின் உட்பகுதியில் அடைத்து வைப்பதிலும், நேரடியாக வெயில்படுமாறு உலா விடுவதையும் தவிர்க்க வேண்டும். அவைக்கு குடிநீர் சுத்தமான முறையில் வைக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் குறிப்பிட்டுள்ள மேலாண்மை முறைகளை பின்பற்றுவதன் மூலம் உயர் வெப்ப அயற்சியினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,District ,Collector ,Sarayu ,Krishnagiri district ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்