×

அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைப்பு போலீசார் விசாரணை செய்யாறு பஸ் நிலையத்தில்

செய்யாறு, மே 17: செய்யாறு பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் தண்ணீர் குழாயை மூடாததால் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட தடம் எண் 130 என்ற பஸ், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு செய்யாறில் இருந்து சென்னை செல்ல பஸ் நிலையத்தில் தயாராக இருந்தது. அந்த பஸ்சில் கண்டக்டராக பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(49) என்பவர் பணியில் இருந்தார். அவர் பஸ் புறப்பட தயாராக இருந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பினார். அப்போது கழிவறையில் உள்ள குழாயை சரியாக மூடவில்லை என கூறப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவரான செய்யாறு கன்னியம் நகரை சேர்ந்த மணிகண்டன், கண்டக்டர் பெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த கட்டையால் தலையில் தாக்கினாராம். இதில் காயமடைந்த கண்டக்டர், சக பணியாளர்களின் உதவியுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் செய்யாறு போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில், ஆட்டோ டிரைவர் மணிகண்டன் செய்யாறு போலீசில் அளித்த புகாரில், செய்யாறு பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறையை, நான் கடந்த ஓராண்டாக பராமரித்து வருகிறேன். அரசு பஸ் கண்டக்டர் பெருமாள் கழிவறையில் உள்ள குழாயை மூடாமல் சென்றதை கேட்டேன். அதற்கு அவர் என்னை ஆபாசமாக திட்டினார். அப்போது, தடுக்க முயன்றதில் வழுக்கி கீழே விழுந்து, தனக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இருதரப்பு புகாரின்பேரில் செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார்.

The post அரசு பஸ் கண்டக்டர் மண்டை உடைப்பு போலீசார் விசாரணை செய்யாறு பஸ் நிலையத்தில் appeared first on Dinakaran.

Tags : Yar bus station ,Seyyar ,Seyyar bus station ,Thiruvannamalai District ,Seiyaru Government ,Seiyaru Bus Station ,
× RELATED மணல் கடத்தல் ஜேசிபியை பறிமுதல் செய்த...