×

வேட்பாளர், முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடலாம் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் வரும் 4ம் தேதி அடையாள அட்டையை காண்பித்து

திருவண்ணாமலை, ஜூன் 1: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது. எனவே, அதற்கான இறுதி கட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி தொகுதிக்கும் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதையொட்டி, அங்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவை பகலாக்கும் வகையில் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. எஸ்பி கார்த்திகேயன், ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி ஆர் ஓ பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது: வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையை நேரில் பார்வையிட, வேட்பாளர் முகவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதற்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை காண்பித்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நான்காம் தேதி காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வந்து விட வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களையும் கொண்டு வர அனுமதி இல்லை. அதே போல், உணவு குடிநீர் ஆகியவை வாக்கு என்னும் மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு 6 தனித்தனி அறைகளில் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். திருவண்ணாமலை மற்றும் ஆரணிதொகுதிகளில் தலா 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே முகவர்கள் அனைவரும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன்பிறகு, சுமார் 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த எண்ணிக்கை அனைத்தும் முடிந்த பிறகு. ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 ஒப்புகை ரசீது இயந்திரங்கள்(விவிபேட்) என்ற அடிப்படையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்கள், ஆரணி மக்களவைத் தொகுதிக்க 30 ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகள் எண்ணப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஒவ்வொரு சுற்று முடிவும் அறிவிக்கப்படும். எனவே, தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி, வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வேட்பாளர், முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடலாம் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல் வரும் 4ம் தேதி அடையாள அட்டையை காண்பித்து appeared first on Dinakaran.

Tags : 4th ,Collector ,Bhaskar Pandian ,Thiruvannamalai ,Arani ,Lok Sabha ,Tamil Nadu ,Bhaskara Pandian ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் தங்கம் வென்ற குத்து சண்டை வீரருக்கு கலெக்டர் பாராட்டு