×

(தி.மலை) தலைமறைவாக இருந்த உறவினர்கள் 3 பேர் கைது நிலத்தகராறில் பெண் தற்கொலை செய்த வழக்கு

ஆரணி, மே 17: ஆரணி அருகே நிலத்தகராறில் பெண்ணை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, விவசாயி. இவரது மனைவி சங்கீதா(43). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பழனிக்கு அண்ணன்கள் சேட்டு, சுப்பிரமணி மற்றும் தம்பி ஆறுமுகம் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் பூர்வீக சொத்து 20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கு விவசாயம் செய்து வந்தனர். ஆனால், பழனியின் விவசாய நிலத்திற்கு செல்ல வழியில்லாததால் சிரமப்பட்டு வந்தார். மேலும், மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும், அவரது நிலத்தை விற்பதற்கு சகோதரர்கள் முட்டுக்கட்டையாக இருந்ததாலும், மனவேதனையில் இருந்த பழனி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து, அவரது மனைவி சங்கீதா அவர்களது நிலத்திற்கு வழி கேட்டு பலமுறை வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும் பலன் இல்லையாம். இதற்கிடையில், கடன் தொல்லை அதிகமானதாலும், அந்த நிலத்தை விற்பனை செய்ய முடியாமலும் இருந்ததாலும், வேறு வழியில்லாமல் தனது கணவரின் அண்ணன் சுப்பிரமணிக்கே குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்து குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளார். பின்னர், சங்கீதாவிற்கு சேரவேண்டிய மீதி பணத்தை கொடுக்காமலும், அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யவிடாமலும் தடுத்து வந்ததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், சங்கீதாவை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சங்கீதா கடந்த 28ம் தேதி காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரணி தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், தனது தாயை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய சுப்பிரமணி, சேட்டு, ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் கைது செய்யக்கோரி அவரது மகள் எழிலரசி(23) மற்றும் உறவினர்கள் 2 நாள் சங்கீதாவின் சடலத்தை வாங்காமல் இருந்து வந்தனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார், வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில், ஆரணி அடுத்த ஆதனூர் கூட்ரோடு பகுதியில் சுப்பிரமணி, சேட்டு, ஆறுமுகம் 3 பேரும் பதுங்கி இருப்பதகாக தாலுகா இன்ஸ்பெக்டருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post (தி.மலை) தலைமறைவாக இருந்த உறவினர்கள் 3 பேர் கைது நிலத்தகராறில் பெண் தற்கொலை செய்த வழக்கு appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Arani ,Palani ,Adanur ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED (தி.மலை) குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய...