×

திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள்

பொதுவாகவே அம்பலம் என்பது சைவ பாரம்பரியத்தின் சிறப்பு விகுதிகளில் ஒன்று. அம்பலம் என்றால் அரங்கம் என்று பொருள் கொள்ளலாம். அதாவது கலை நிகழ்ச்சி நிகழ்த்தப் பெறும் மேடையும், மேடையைச் சார்ந்த இடமும். திருச்சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் சிவபெருமானின் தலங்கள் வர்ணிக்கப்படுகின்றன. ஈசனின் நடராஜ நடனம், இதுபோன்ற அம்பலங்களில் பக்தர்களுக்கு பக்திச் சுவை ஊட்டுகிறது.

திருமால் அர்ச்சாவதாரம் கொண்டிருக்கும் திருத்தெற்றியம்பலமும் அதுபோன்று ஒரு அம்பலம்தான், அதாவது அரங்கம்தான். அந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னால் திண்ணை ஒன்று இருக்கும். வீட்டிலிருப்போர் அங்கே வந்து ஓய்வாக அமர்ந்துகொள்ளவோ, தெருவழியே போகும் தெரிந்தவர்களை அழைத்து அந்தத் திண்ணையில் அமர்த்தி அவருடன் உரையாடவோ பயன்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்தத் தெரு வழியாகப் போகும் முன்பின் தெரியாதவர்கள், கடுமையான வெயில் அல்லது மழையின் பாதிப்புக்கு ஆட்படாதவகையில் அந்தத் திண்ணையில் சற்று நேரம் ஒதுங்கிப் பிறகு போவதும் உண்டு. இந்தப் பரோபகார சிந்தனை பின்னாளில் முற்றிலும் இல்லாமல் போனது இப்போதைய வேதனை. இந்தத் திண்ணை, ‘தெற்றி’ என்று வழங்கப்பட்டது. வீட்டுத் திண்ணை தெற்றி என்றும், கோயிலுக்குள் இருக்கும் மேடான அரங்கம் போன்ற பகுதி தெற்றியம்பலம் என்றும் அழைக்கப்பட்டன. இந்த தெற்றியம்பலம் சித்திரக்கூடமாகத் திகழ்ந்தது. இங்குதான், இறைவனை மகிழ்விக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் கூடி அமர்ந்து அந்த நிகழ்ச்சிகளை பக்தி வழிபாடாக அனுசரித்து ஆனந்தம் அடைந்தார்கள்.

திருநாங்கூரில் செங்கண்மால், ரங்கநாதர், லட்சுமி அரங்கர் என்ற பெயர்களில் போற்றப்படும் பெருமாள், கொலுவிருந்து பேரருள் புரியும் ஒரு தலம் திருத்தெற்றியம்பலம் என்று புகழப்படுகிறது. அதாவது இந்தக் கோயிலே அம்பலம், அரங்கம். கோயிலுக்குள் ஒரு பகுதியாக இருக்கக்கூடியது அரங்கம். ஆனால் கோயிலே அரங்கமாத் திகழ்வதற்கு விளக்கம் உண்டா?

உண்டு என்கிறார் திருமங்கையாழ்வார். இந்தத் திருத்தலத்தின் மீது பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ள ஆழ்வார், 2,6 மற்றும் 8ம் பாசுரங்களில் ‘இது ஏன் திருத்தெற்றியம்பலம்?’ என்பதை விளக்குகிறார்.

‘…இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்கணார் தம் சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே’
என்ற இரண்டாவது பாசுர அடிகள் மூலம், வண்டுகளின் ரீங்கார சங்கீதமும், பெண்களின் சிலம்பொலி இசையும், காதுகளையும், மனதையும் நிறைவிக்கும் திருத்தெற்றியம்பலம் என்று
விளக்குகிறார்.

‘…மரகதம்போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு தேன்போலும் மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே’
என்ற ஆறாம் பாசுரத்தின் அடிகள் மூலம் இந்த ஊர் இளம்பெண்கள், பச்சை வண்ணக் கிளிகளைத் தம் கைகளில் ஏந்தி அவற்றுக்கு நாராயணனின் நாமங்களை இசையாகக் கற்பிக்க, அவையும் அதே இசைக் குரல் பிறழாமல் திரும்ப இனிமையாக உச்சரிக்கும் திருத்தெற்றியம்பலம் என்கிறார்.

‘…இலங்கிய நான்மறை அனைத்தும், அங்கம் ஆறும், ஏழிசையும், கேள்விகளும், எண்திக்கு எங்கும் சிலம்பிய நற்பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து
என் செங்கண்மாலே’ என்ற எட்டாவது பாசுரத்தின் அடிகள் மூலம், நான்கு வேதங்கள் ஒலித்த தலம் இது; ஆறு அங்கங்களும், ஏழிசையும் இசைத்த தலம் இது; சிறப்புமிக்க கேள்விச் செல்வத்தால் எட்டு திக்குகளிலும் இசைபட வாழ்ந்திருந்த மேன்மக்கள் வாழ்ந்த தலம் இது என்று இந்த திருத்தெற்றியம்பலத்தைப் புகழ்கிறார்.

இந்த மூன்று பாசுரங்களின் மூலம், இசை இழைந்தோடிய தலம் என்று விளக்க முற்பட்டதிலிருந்து இந்தத் தலமே ஓர் அரங்கமாக, அம்பலமாகத் திகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, இது திருத்தெற்றியம்பலம், சரிதானே!
கோயிலினுள் பலிபீடம் உள்ளது; துவஜஸ்தம்பத்தைக் காணோம். வழக்கம்போல கருடன் சந்நதி உண்டு. மூலவர், பள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம் என்று ஊர்ப் பெயரைச் சொல்லியோ, செங்கண்மால் அல்லது ரங்கநாதர் அல்லது லக்ஷ்மி அரங்கர் என்று பெருமாள் பெயரைச் சொல்லியோ இந்தக் கோயிலுக்கு வழிகேட்டால் பெரும்பாலும் கிடைக்காது. மாறாகப் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் என்று கேட்டால் உடனே சரியான வழி காட்டு வார்கள்) தேவி, பூதேவி சமேதராகத் திருக்கோலம் காட்டுகிறார். முகத்தை நன்றாகத் திருப்பி நம்மைப் பார்ப்பதுபோலவே இருக்கும் இந்த அமைப்பு, மனதுக்கு சந்தோஷம் தருகிறது. பகவான் நம்மை நேராகப் பார்க்கிறார்; நம் குறைகளையும், ஆதங்கங்களையும் நேரடியாகக் கேட்கிறார் என்ற தோழமை, பாசம் புரிகிறது. செங்கமலவல்லித் தாயார் தனி சந்நதி கொண்டிருக்கிறாள். பாசமிகு அன்னையாக அருள் மழை பொழிகிறாள், தாயார். சக்கரத்தாழ்வாரோடு, பிற ஆழ்வார்களும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வரிசையாக கொலுவிருக்கிறார்கள். திருமண பந்தம் மேன்மேலும் உறுதி பெறவும், மகிழ்ச்சி குறையாத மணவாழ்க்கை நிரந்தரமாக அமையவும் இந்தப் பெருமாள் அருள் புரிகிறார்.

திருமகளும், ஆதிசேஷனும் திருமாலைவிட்டு என்றுமே பிரியாத வரம் கோரிப் பெற்றிருந்தார்கள். திருமகளே சீதையாகவும், ஆதிசேஷனே லட்சுமணனாகவும், ராம அவதாரத்தில் ராமனைப் பிரியாதிருந்தது போலவே, என்றென்றும் அவரை விட்டு அகலா பேறு வேண்டும் என்று கேட்டு அது நிறைவேறவும் பெற்றனர்.‘நச ஸீதா த்வயா ஹீநா நசாஹம் அபிராகவ, முகூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்ருதௌ’ என்று வால்மீகி முனிவர், தன் ராமாயணத்தில் அவர்களுடைய ஆதங்கத்தை விவரிக்கிறார். அதாவது ஒரு மீன் எப்படி தண்ணீரிலிருந்து வெளியே வந்து தரையில் துடிக்குமோ, அதன் உடல் மீதிருக்கும் ஈரப்பசை முற்றிலுமாக உலரும்போது எப்படி அதன் உயிரும் உதிர்ந்து
விடுமோ அதுபோலவே சீதையும், நானும் உன்னுடன் இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எங்களைப் பிரிய வேண்டும் என்று நீ மனப்பூர்வமாகவே விரும்பும் பட்சத்தில் அதுவரை எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அதன் பிறகு மரணம் எய்திவிடுவோம்’ என்று உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறான், லட்சுமணன்.

ராமனுக்கு முந்தைய வராக அவதாரத்தைத் திருமால் மேற்கொண்டபோது இந்தப் பிரிவின் வேதனையை அவர்கள் அனுபவித்தார்கள். அதைத் தாங்க முடியாததாலேயே இப்படி ஒரு நெகிழ்ச்சியான விண்ணப்பத்தை ராமனிடம் சமர்ப்பித்தார்கள். திருமால் வராக அவதாரம் எடுத்தது, ஹிரண்யாட்சகன் என்ற அசுரனிடமிருந்து பூமி தேவியைக் காப்பதற்காக. சனகாதி முனிவர்களால் சபிக்கப்பட்ட சகோதரர்களில் ஒருவனான இந்த அரக்கன் (இன்னொருவன், இரணிய கசிபு, பிரகலாதனின் தந்தை), பூமிதேவியை அப்படியே கவர்ந்துகொண்டு பாதாள உலகத்துக்குள் கொண்டுபோய் சிறை வைத்துவிட்டான். பிரம்மனும், பிற தேவர்களும் மந் நாராயணனிடம் முறையிட்டு, பூமியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்ள, பரமன், வராக அவதாரம் எடுத்தார். அவ்வாறு எடுத்து அவர் வைகுந்தத்தை விட்டு நீங்கும்போது, மஹாலட்சுமியும், ஆதிசேஷனும், தாங்களுடன் அவருடன் வருவதாகவும் அவரைப் பிரிந்திருப்பது கொஞ்சமும் இயலாதது என்றும் இறைஞ்சினார்கள்.

எம்பெருமான் அவர்களிடம், ‘‘நீங்கள் இருவரும் மண்ணுலகில், தமிழ்நாட்டில், பலாசவனத்துக்குச் செல்லுங்கள்; அங்கே திருநாங்கூர் எனும் திவ்ய தேசத்தில் என்னைக் கருதி தவத்தில் ஈடுபடுங்கள். அங்கே ஏற்கெனவே என் வருகையை எதிர்நோக்கி சிவபெருமான் தவமியற்றிக்கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்துகொள்ளுங்கள். விரைவில் இரண்யாட்சனை அழித்து பூமிதேவியைக் காப்பாற்றி அத்தலத்துக்கு வருகிறேன். அர்ச்சாவதார மூர்த்தியாக நீங்கள் அங்கே என்னைக் காண்பீர்கள்’ என்று வாக்கு அளித்தார்.

அதன்படியே அவ்விருவரும் திருத்தெற்றியம்பலம் வந்து திருமாலைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். தான் வாக்களித்தபடியே, இரண்யாட்சனை வதம் செய்து, நிலமகளை மீட்டுக்கொண்டு நேராக அவர்கள் முன் பிரத்யட்சமானார், பெருமாள். பெருமாளையும், பூமிதேவியையும் ஒருங்கே கண்ட மஹாலட்சுமியும், ஆதிசேஷனும் ‘இனி அவர் நம்மைப் பிரியார்’ என்ற நம்பிக்கையில் மகிழ்ந்தனர். அதோடு திருமால் நான்கு புஜங்களுடன் விசேஷமாகக் காட்சியளித்தது அவர்கள் சந்தோஷத்தை அதிகரித்தது.

அசுரனைக் கொன்ற களைப்பு நீங்க பரந்தாமன் ஓய்வு கொள்ள வேண்டும் என்பதற்காக ஆதிசேஷன் உடனே அங்கே மஞ்சமாக மாறினான். தேவி அவரது நான்கு புஜங்களையும் இதமாகப் பிடித்துவிட, அவரது கால்மாட்டில், பூதேவி, தன்னை மீட்டருளிய அந்தப் பரம்பொருளுக்கு நன்றி சொல்வது போல அமர்ந்தாள். இந்த திவ்ய திருக்கோலத்தைக் காணும்போது சீதையும், லட்சுமணனும் கொண்ட ஏக்கம் புரிகிறது. திருமாலோடு என்றுமே இணைந்திருந்தவர்களால், எப்படி அவரைப் பிரிய மனம்வரும் என்ற கேள்வி நமக்குள்ளும் இயற்கையாகவே எழுகிறது.

தியான ஸ்லோகம்
“ரக்தாந் தாக்ஷ ஸமாஹ்வயோ ஹரிரஸௌ ரக்தாம் புஜா நாயிகா
தீர்த்தம் ஸூர்ய நிஷேவிதம் ச்ருதிமயம் தத்வ்யோ மயாநம் மஹத்
உத்யத் ஸூர்ய முகச்ச ரக்தகமலா ஸாக்ஷாத் க்ருதஸ் ஸர்வதா
மஹ்யா சைவ ததா புஜங்கசயநோ ரக்தாம்பரோ ராஜதே’’

எப்படிப் போவது?: வைகுந்த விண்ணகரக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது, திருத்தெற்றியம்பலம். முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு சீர்காழியிலிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ அமர்த்திக்கொண்டு, இக்கோயிலுக்கு வரலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11 மணிவரையிலும், மாலை 3 முதல் 6 மணிவரையிலும்.

முகவரி: அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106.

The post திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Thiruthiyambalam Pallikonda Perumal ,Ambalam ,Tiruchirambalam ,Ponnambalam ,Lord Shiva ,
× RELATED இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50...