×

துலாம் ராசியினர் குணத்தில் அமைதி, செயலில் வேகம்!

நேர்மையையும் நீதியையும் தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்கின்றவர்கள் துலாம் ராசியினர். துலாம் ராசி அல்லது துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், ஐப்பசி மாதம் பிறந்தவர்கள். சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இந்த பண்புகள் இருப்பதை காணலாம்.

வசீகரம்

துலாம் என்பது காற்று ராசி. இவர்கள் எல்லோரிடமும் காற்றைப் போல கலந்து இனிமையாகப் பழகுவார்கள். ேதாற்றத்தில் அழகும் கவர்ச்சியும் உடையவர்கள். நடை உடை பாவனைகளில் ஒரு வசீகரத் தன்மை இருக்கும். எதிர் பாலின ஈர்ப்பு இவர்களுக்கு இயல்பாகவே கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

உதவும் கரங்கள்

பிறருடைய இன்ப துன்பங்களில் ஆத்மார்த்தமாகப் பங்கெடுப்பார்கள். ஒரு கல்யாணத்துக்கு ஏதோ போனோம், சாப்பிட்டோம், மொய் செய்தோம், வந்தோம் என்று இருப்பதில்லை. அந்த நிகழ்வில் இவர்களுடைய பங்கு நினைவு கூரத்தக்க வகையில் இருக்கும்படி ஏதேனும் ஒரு உதவியைச் செய்வார்கள்.

சமாதானத் தூதுவர்

சிறப்பான பேச்சுத் திறன் கொண்ட இவர்கள், சமரசம் செய்வதில் கெட்டிக்காரர்கள். தீராத பிரச்னையையும் நொடியில் தீர்த்து விடுவார்கள். இருதரப்பினரையும் அழைத்துப் பேசி இருவரையும் சமாதானமாகப் போக வைப்பதில் கெட்டிக்காரர்கள்.

இனிமை, இளமை

துலாம் ராசியினர் எப்போதும் எந்த வயதிலும் மற்றவர்களைவிட இளமையாகவும் துள்ளலோடும் இருப்பர். அமைதியாக இனிமையாகப் பேசுவர். பேச்சின் மூலமாக மற்றவர்களைக் கொக்கி போட்டு தன்பால் இழுத்துவிடுவர். நெகட்டிவாக பேசுகின்றவர்கள். எந்நேரமும் வசை மொழி, ஆபாசப் பேச்சு மற்றும் சாபம் விடுகின்றவர்களை கண்டால் ஒதுங்கிவிடுவர். காதல் கிரகமான கோபமாகப் பேசுவதைகூட இவர்கள் விரும்புவதில்லை. குரலை உயர்த்திப் பேசினாலும் இவர்களுக்குப் பிடிக்காது.

குழுத் தலைமை

துலாம் ராசியினர், குழுவை முன் நடத்தி செல்லும் ஆற்றல் படைத்தவர்கள். ஊர் கூடி தேர் இழுப்பதில் கெட்டிக்காரர்கள். ஏழை பணக்காரர் என்று யாராக இருந்தாலும், பழகுவதற்கு எளிமையானவர்கள். எல்லோரோடும் இனிமையாக பேசுவார்கள். அகம்பாவம், அகங்காரம், ஆணவம் என்பது இவர்களுக்கு இருக்காது. தன் குடும்பம், குழு, மொழி, இனம் போன்றவற்றிற்காக உயிரையும் கொடுக்க முன்வருவர். இவர்களின் நேர்மையை சந்தேகித்து யாராவது விமர்சித்தால் மட்டும் சுனாமி போல பொங்கி எழுவார்கள். மற்ற வகையில் இவர்கள் தங்களை விமர்சிப்பதை தாங்கிக் கொள்வர். அல்லது உதாசீனப்படுத்திவிட்டு போய்விடுவர். அவற்றுக் கெல்லாம் பதில் அளிப்பது கிடையாது.

சென்டர் ஆஃப் அட்ராக்சன்

துலாம் ராசியினர் ஒரு இடத்தில் ஒரு ஹாலில் இவர்கள் அமரப்போகும்போது, பிளாஸ்டிக் சேர் இருந்தால் அதில் உட்காரமாட்டார்கள். தன் அருகே சோபா இல்லாவிட்டாலும் இரண்டு பேரை சுற்றிக்கொண்டாவது போய் சோபாவில் உட்காருவார்கள். தன்னை எல்லோரும் பார்க்கும் வகையில் தன் பேச்சை எல்லோரும் கேட்கும் வகையில் இடம் பார்த்து உட்காருவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் எல்லோரையும் கவர்ந்துவிடுவர். சொகுசாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

காதலோ காதல்

துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை இயல்பாகவே அமையும். தன் காலம் முழுக்க காதலித்துக் கொண்டே இருப்பார்கள். காரணம், அவர்கள் காதலுக்குரிய கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். லவ் அண்ட் ரொமான்ஸ் என்று சொல்லப்படும் காதலுக்கும், காதல் களியாட்டங்களுக்கும் உரியது சுக்கிரன் கிரகமாகும். தாம்பத்தியம் மற்றும் போகத்திற்கு உரியவர் குரு பகவான். எனவே, குருவின் அருள் இருக்கும் ஜாதகருக்கு போகம் சித்திக்கும், புத்திர யோகம் உண்டு. சுக்கிரன் மட்டும் ஆட்சி உச்சம் அல்லது சுபப் பார்வையோடு நட்பு ராசிகளில் இருந்தால், நிறைய காதல் கிடைக்கும். ஆனால், அது திருமணத்தில் முடியுமா தாம்பத்தியம் நிலைக்குமா குழந்தை பிறக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது.

நேர்த்தியானவர்கள்

துலாம் ராசியினர் எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், நேர்த்தியாகவும் திருத்தமாகவும் நிதானமாகவும் அழகாகவும் சிறப்பாகவும் செய்வார்கள். அரைகுறை வேலை என்பதே இவர்களிடம் இருக்காது. அழுக்கு, குப்பை என்பதும் இவர்களுக்கு ஆகாது. துலாம் ராசி குழந்தைகள் அல்லது துலாம் லக்னத்தில் பிறந்த குழந்தைகள், சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த குழந்தைகள் மண், தூசி, தண்ணீர் போன்றவை தமது விரல் நுனியில் படுவதைகூட விரும்பமாட்டார்கள்.

செம்மை மாதர்

துலாம் ராசியில் பிறந்த பெண்களும் நீதி நேர்மை நியாயம் என்பதை தங்கள் வாழ்வில் உயிர்மூச்சாக கடைப்பிடிப்பார்கள். அநியாயமான காரியங்களுக்கு துணைபோவது கிடையாது. மேலும், அவற்றை எதிர்த்துப் போராடி தன்னுடைய நன்மைகளை இழந்தாவது நீதிக்காக குரல் கொடுப்பார்கள். சிலருக்கு இதனால் கெட்ட பெயர் கிடைத்தாலும் கூட அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும் பெண்கள் பெரும்பாலும் இந்த லக்னத்தை ராசியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

நிறைவு

அமைதியான கன்னி ராசிக்கும், ஆக்ரோஷமான விருச்சிக ராசிக்கும் இடையில் உள்ள துலாம் ராசியில் பிறந்தவர்கள், குணத்தில் அமைதியும் செயலில் வேகமும் நிரம்பியவர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதால், எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள உலகம், இன்பமயமான உலகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

The post துலாம் ராசியினர் குணத்தில் அமைதி, செயலில் வேகம்! appeared first on Dinakaran.

Tags : Aippasi ,Venus ,
× RELATED துலாம் ராசி ஆண் இனியவன், ரசிகன்…