×
Saravana Stores

கோலாகலமாக நடைபெற்று வந்த வீரபாண்டி சித்திைரத் திருவிழா இன்றுடன் நிறைவு

தேனி, மே 14: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மே 7ம் தேதி துவங்கிய நிலையில் 8 நடைபெற்று வந்த நிலையில் இன்று திருவிழா நிறைவு பெறுகிறது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் இறுதி வாரத்தில் எட்டு நாட்கள் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவை காண வருவது வாடிக்கை.

மேலும் அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள், தங்களது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து நேர்த்தி கடன்களாக ஆயிரம் கண் பானை எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அங்க பிரதட்சணம் செய்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல் அக்னி சட்டி எடுத்தல் சேரு பூசிக்கொண்டு மாறுவேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்துதல் என பல்வேறு வகைகளான நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடுதல் விழா கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து மே 7ம் தேதி முதல் திருவிழா கோலாகலமாக துவங்கியது. திருவிழாவின் முதல் இரண்டு நாட்கள் அம்மன் அலங்கரிக்கப்பட்டு முத்து பல்லக்கு மற்றும் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து கடந்த 10ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது.

அன்றைய தினம் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இத்தகைய இத்திருவிழா இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. நாளை ஊர் பொங்கல் வைத்து விழா நடைபெற உள்ளது.

கடந்த எட்டு நாட்களாக நடந்துவரும் திருவிழாவில் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் அம்மனை தரிசித்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு ராட்டினங்களில் ஏறி குடும்பத்துடன் குதூகலம் அடைந்தனர். இத்திருவிழா நடைபெறும் பொழுது வழக்கமாக மழை பெய்வது வழக்கம். இவ்வாண்டும் திருவிழாவின் போது கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில், மழை பெய்து வந்தது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.

மாலையில் பெய்த மழையால் மகிழ்ச்சி
நேற்று மதியம் மூன்று மணிக்கு தேனி நகரில் புயல் காற்று வீசிய நிலையில் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடர்ந்து நேற்று இரவு வரை பெய்தது இதனால் தேனி நகரமே குளிர்ச்சி அடைந்தது. அதேசமயம் தேனி அருகே வீரபாண்டி சித்திரைத் திருவிழா நடந்து வரும் நிலையில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை சற்றே குறைந்து இருந்தாலும் மழையில் நனைந்தபடியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். ஆனால் கோயிலை சுற்றிலும் போடப்பட்டிருந்த திருவிழா கடைகள் மழை காரணமாக விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. இதே போல பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

The post கோலாகலமாக நடைபெற்று வந்த வீரபாண்டி சித்திைரத் திருவிழா இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Veerapandi Chithairat festival ,Theni ,Gaumariamman temple Chitirath festival ,Veerapandi ,Veerapandi Chithirath Festival ,
× RELATED தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின