×
Saravana Stores

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.19 லட்சத்தை இழந்த இன்ஜினியர்கள் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார்

தேனி, மே 14: தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தென்கரை பேரூராட்சியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் தாஸ் (35), இன்ஜினியர். இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்’ என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதை தொடர்ந்து விளம்பர அளித்த பங்கு வர்த்தக நிறுவனத்தின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், ‘பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் தினசரி 5 முதல் 50 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய தாஸ், பங்கு வர்த்தக நிறுவன வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்து 92 ஆயிரம் வரை முதலீடு செய்தார். தாஸூக்கு லாபம் என ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 500 வரை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் 8 லட்சத்து 99 ஆயிரத்திற்கு லாபம் என தாஸின் வங்கிக் கணக்கில் எதுவும் வரவாகவில்லை. இதை தொடர்ந்து தாஸ் பங்கு வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது முறையான பதில் இல்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாஸ், இது குறித்து தேனி எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதே போல போடியில் உள்ள பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (35), இன்ஜினியர். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு தகவல் வந்தது. அதில், ‘நாங்கள் அளிக்கும் ஓட்டல்களின் பெயரை கூகுள் மேப் மூலம் தேடி, அந்த ஓட்டல்களுக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்தால், பணம் கிடைக்கும் என ஆசை வலை விரித்துள்ளனர். இதனை நம்பிய வினோத் முதலில் ரூ.3 ஆயிரம் செலுத்தி குறுஞ்செய்தியில் வந்த ஓட்டல்களுக்கு ஸ்டார் மதிப்பீடு வழங்கினார். இதை தொடர்ந்து வினோத்திற்கு ரூ.4,200 வரை கிடைத்தது. இதையடுத்து, வினோத் பல தவணைகளாக ரூ.10 லட்சத்து 74 ஆயிரத்து 440 செலுத்தினார்.

அதன்பின் லாபத் தொகை வரவில்லை. இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பிய வாட்ஸ் அப் எண்ணை வினோத் தொடர்பு கொண்டபோது முறையான பதில் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத், தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.19 லட்சத்தை இழந்த இன்ஜினியர்கள் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Theni Cybercrime Police ,Theni ,Das ,Bharati Nagar ,Periyakulam ,Tenkarai Municipality, Theni District ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பின