- கோவை மேட்டுப்பாளையம் ரோடு
- மேட்டுப்பாளையம்
- அஇஅதிமுக
- ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம்
- சாமிசெட்டிபாளையம்
- பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ
மேட்டுப்பாளையம், மே 10: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பெரியநாயக்கன்பாளையம் எல்எம்டபிள்யூ அருகே ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் வரை 1.89 கிமீ நீளத்திற்கு ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 2020ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பல ஆண்டுகளாக இந்த பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், மேட்டுப்பாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை வசிக்கும் மக்கள் பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும், கோவைக்கு செல்லவும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதாவது 2024 ஜனவரி மாதம் தேர்தலுக்காக அவசர கதியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த மேம்பாலத்தை திறந்துவைத்தார். அப்போது, இவ்விழாவில் பங்கேற்ற அதிமுக, பாஜவினர் இடையே ஏற்பட்ட முட்டல்களும், மோதல்களும் ஊரறிந்த விஷயம்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக இந்த மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. வழிந்து ஓட வழியில்லாமல் பாலத்தின் மேல் பகுதியிலேயே தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பொதுமக்களின் பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டது. மேலும், இந்த மேம்பாலத்தில் மின்சாரம், தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்துதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட எவ்வித பணிகளும் முறையாக நடைபெறாமல், இந்த பாலத்தை, அவசர கதியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம், கூடலூர், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த மேம்பாலம் எவ்வித வசதிகளும் இன்றி அவசர கதியில் திறக்கப்பட்டது. இந்த பாலம் கட்டுவதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. இதனை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வண்ணாங்கோவில் பகுதியில் இருந்து மேம்பாலத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலை மற்றும் மேம்பாலத்திலிருந்து சர்வீஸ் சாலைக்கு இறங்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது.
இந்த விஷயமே பாலம் திறப்பத்தற்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற 2023ம் ஆண்டு டிச.11 ம்தேதி சோதனை ஓட்டத்தின்போதுதான் கண்டறியப்பட்டது. இதேபோல், மேம்பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அனைத்து சர்வீஸ் சாலைகளிலும் எவ்வித பணிகளும் முறையாக நடைபெறவில்லை. இதனால் சர்வீஸ் சாலைகளில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. பேருக்குத்தான் ரூ.115 கோடியில் பாலம். ஆனால், மழை தண்ணீர் போறதுக்கு வழியே இல்லையே…? இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கோவை மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலத்தில் மழைநீர் வடிந்து செல்ல வசதியில்லை appeared first on Dinakaran.