×

ஜவ்வாதுமலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம் ₹150 முதல் ₹450 வரை விற்பனை பன்ருட்டிக்கு அடுத்தபடியாக

போளூர், மே 7: பன்ருட்டிக்கு அடுத்தபடியாக ஜவ்வாதுமலை பலாப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இவை ₹150 முதல் ₹450 வரை விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழம் என்ற வார்த்தையை கேட்டவுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் வாயில் நீர் சுரக்கும். குழந்தைகள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழமாக பலாப்பழம் விளங்கி வருகிறது. காரணம் இதன் சுவையும் மனமும் வேறு எந்த பழத்திலும் இருக்காது. அப்படி சிறப்பு பெற்ற பலாப்பழம் பன்ருட்டிக்கு அடுத்தப்படியாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பலாப்பழம் தான் சுவைக்க தூண்டும் வகையில் உள்ளது.

ஜவ்வாதுமலைக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையான ஜவ்வாதுமலை மற்ற மலைகளை விட நிலப்பரப்பு அதிகமாக கொண்டுள்ளது. இங்கு முக்கனிகளில் வாழையை தவிர மா, பலா ஆகிய இரண்டும் அதிகளவில் உற்பத்தியாகிறது. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வரை பலாப்பழத்தை யாரும் விற்பனை செய்யமாட்டார்கள். மாறாக தங்கள் வீட்டிற்கோ, கிராமத்திற்கோ வரும் அதிகாரிகள் உறவினர்கள், மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறையினர், வனத்துறையினர் ஆகியோருக்கு இலவசமாக கொடுப்பதை பெருமையாக கருதி வந்தனர்.

ஜவ்வாதுமலையில் கோடைவிழா தொடங்கிய பிறகு பலாப்பழம் விற்பனை அதிகரித்தது. எனவே அங்குள்ள மலைவாழ் மக்கள் பலாப்பழங்களை இப்போது ஒரு வர்த்தக சாகுபடியாக செய்கின்றனர். ஆனால் பன்ருட்டி போல பலாப்பழம் தோட்டங்கள் இங்கு கிடையாது. இயற்கையாகவோ பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் பலா மரங்கள் மட்டுமே உண்டு. அதே சமயம் மலைவாழ் மக்கள் வசிக்கும் நிலங்கள் மற்றும் வீடு என எல்லா இடத்திலும் வீட்டிற்கு ஒரு பலாப்பழம் மரம் என கட்டாயமாக வளர்க்கப்பட்டு வருகிறது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரிக்கும் மாதங்களாக உள்ளது.

மற்ற மாதங்களிலும் ஓரளவுக்கு கிடைத்து வருகிறது. ஆனால் அதிகரிக்கும் காலங்களில் கிடைக்கும் பலாப்பழங்கள் மட்டுமே சுவையாக இருக்கும். எனவே கோடைக்காலங்களில் கிடைக்கும் பலாப்பழங்களை வாங்குவதற்கு என்றே ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் இந்தாண்டு ஜவ்வாதுமலையில் பலாப்பழம் விளைச்சல் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் கடந்தாண்டு போதிய அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்ததாலும் அதன் பிறகு ஏப்ரல் மாதங்களில் மழை பெய்ததாலும் தட்ப வெப்பநிலை பலாப்பழம் உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. எனவே இந்தாண்டு எந்த பலா மரங்களை பார்த்தாலும் வழக்கத்தை விட பல மடங்கு காய்கள் காய்த்து தொங்குகிறது.

மேலும், ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள பல கிராமங்களில் பலாமரத்தில் 200க்கும் மேற்பட்ட பலா காய்கள் காய்த்து தொங்குகிறது. இவை அளவுக்கு ஏற்ப ₹150 முதல் ₹450 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்தாண்டு ஜவ்வாதுமலையில் விளைந்த பலாப்பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து வேலூர், திருவண்ணாமலை, போளூர், ஆலங்காயம், திருப்பத்துர், வாணியம்பாடி, ஆம்பூர், செங்கம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் அதிகரித்ததால் இதன் விளையும் கனிசமாக குறைந்து காணப்படுகிறது. ஆகையால் இந்தாண்டு ஜவ்வாதுமலை சுற்றியுள்ள அனைத்து நகரங்களிலும் ஜவ்வாதுமலையில் விளையும் பலாப்பழங்களை சுவைக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.

The post ஜவ்வாதுமலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம் ₹150 முதல் ₹450 வரை விற்பனை பன்ருட்டிக்கு அடுத்தபடியாக appeared first on Dinakaran.

Tags : Javvadumalai ,Dinakaran ,
× RELATED பண்ருட்டிக்கு அடுத்தபடியாக ஜவ்வாதுமலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்