×
Saravana Stores

தி.கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்

நாமக்கல், மே 6: திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, தனி லைன் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், விவி பேட் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 29 நாட்கள் உள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், உள்ள சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,661 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏடிஎஸ்பிகள், டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் என சுழற்சி முறையில் மொத்தம் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் உமா, எஸ்பி ராஜேஸ்கண்ணன் ஆகியோர் தினமும் வாக்கு எண்ணும் மையத்தை, நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதை தவிர சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தினமும் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு வருகிறார். மேலும், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் 45 பேருக்கு, வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்க அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அவர்களும் தினமும் மையத்துக்கு சென்று, கட்டுப்பாட்டு அறையில் உள்ள எல்இடி திரையில் வரும் காட்சிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் 310 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, எல்இடி திரை மூலம், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. சமீபத்தில் நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சிறிது நேரம் செயல்படாமல் போனதாக தகவல் பரவியது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், கூடுதலாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தனி லைன் மூலம், கலெக்டர் கண்காணிக்கவேண்டும் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், மேலும் 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு இயந்திரங்கள், 10 பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஆகியோர், நேரடியாக கண்காணிக்கும் வகையில், தனி லைன் மூலம் 10 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

The post தி.கோடு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : T.Kodu ,Namakkal ,Tiruchengode ,center ,Tamil Nadu ,Pondicherry ,Kodu ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்