மதுக்கரை,மே5: கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்.இன்ஸ்பெக்டர் இளவேந்தன் தலைமையிலான போலீசார் கல்லூரி அருகே கண்காணித்தனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, பிடிபட்ட நபர்கள் கோவை குறிச்சியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (59), மற்றும் ஈரோடு மாவட்டம் கூலிகாரன் பாளையத்தை சேர்ந்த சிவாஜி (49) என்பதும் தெரிய வந்தது. ரியல் எஸ்டேட் வேலை செய்து வரும் இருவரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதற்காக வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் மதுக்கரை தாலுக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post ஈச்சனாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.