×

தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி

யவத்மால்: மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பாஜ மூத்த தலைவரும் ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி, மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 19ம் தேதி முதற்கட்ட தேர்தலின் போது, நாக்பூர் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து அவர் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜ வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், நேற்று யவத்மால்-வாஷிம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புசாத் என்ற இடத்தில் நிதின் கட்கரி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, நிதின் கட்கரி திடீரென மயக்கமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள், நிதின் கட்கரியை மேடையில் இருந்து வெளியே தூக்கிச் சென்று முதலுதவி அளித்தனர்.

பின்னர், சில நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்ததும் நிதின் கட்கரி மீண்டும் மேடைக்கு வந்து தனது உரையை நிறைவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வெப்பம் காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டது. இப்போது நான் நலமாக உள்ளேன். தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன்’ என்று தெரிவித்தார்.

The post தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,Yavatmal ,Union Minister ,Maharashtra ,BJP ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நாக்பூர் தொகுதியில் போட்டியிடும்...