×
Saravana Stores

கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்

 

கோவை, ஏப். 24: கோவை காந்திபார்க் பகுதியில் மாநகராட்சி நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளம் பராமரிப்பில் தனியார் நீச்சல் குளங்களை மிஞ்சும் அளவிற்கு தூய்மையாக இருக்கும். இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 25 மீட்டர் நீளம் மற்றும் 13 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீச்சல் குளத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் நீர் மாற்றப்படுகிறது. அன்றைய தினம் நீச்சல் குளத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

நீச்சல் பயிற்சி வழங்க மூன்று பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு லைப் கார்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு முறை நீச்சல் அடிக்க 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர மாதாந்திர பயிற்சிக்கு 1500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சி செய்து வருகின்றனர்.

மேலும், காலை 5.30 மணி முதல் 7.30 வரை அட்வான்ஸ் பயிற்சியும், பேசிக் பயிற்சி காலை 7.30 மணி முதல் 8.30 வரையும், பெண்களுக்கு என காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், பொதுமக்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறையொட்டி மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு வரும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் அதிகளவில் குவியும் சிறுவர்கள், குழுவாக சேர்ந்து நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் நீச்சல் அடித்து விளையாடி மகிழ்கின்றனர்.

 

The post கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,Coimbatore Gandhi Park ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்