ஆலந்தூர், ஏப்.23: தேர்தல் நிதியை சுருட்டியதாக ஏற்பட்ட உள்கட்சி மோதலில், அதிமுக நிர்வாகியின் மகனுக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்துள்ளது. இதில் அக்கட்சியின் வட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர். நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (57). சென்னை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். நந்தம்பாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், இவரது மகன் ஜெகதீஸ்வரன் (28) நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள கோதண்டராமர் கோயில் அருகே நின்று தனது நண்பரான அருண் என்பவருடன் தேர்தல் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட ₹18 ஆயிரத்தை வட்டச் செயலாளர் ராஜிவ்காந்தி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்காமல், அவரே வைத்துக்கொண்டதாக ஜெகதீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து ராஜிவ்காந்தியிடம் சென்று பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஏன் பணத்தை பிரித்துக் கொடுக்கவில்லை என அருண் கேட்டுள்ளார். அதற்கு நான் பணத்தை பிரித்து கொடுக்கவில்லை என்று உனக்கு யார் சொன்னது என ராஜிவ்காந்தி கேட்டுள்ளார். ஜெகதீஸ்வரன சொன்னதாக அருண் சொன்னதையடுத்து கோபமடைந்த ராஜிவ்காந்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, கோதண்டராமர் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த ஜெகதீஸ்வரனிடம் இதுபற்றி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றியதால், அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து, ஜெகதீஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளார். இதில் தோல் பட்டை எலும்பு முறிந்த நிலையில் கிடந்த ஜெகதீஸ்வரனை அவரது தந்தை ஏழுமலை மீட்டு பரங்கிமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அதிமுக வட்டச் செயலாளர் ராஜிவ்காந்தி மீது புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து ராஜிவ்காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது appeared first on Dinakaran.