×
Saravana Stores

சென்னையில் மாடுகளை பராமரிக்க புதிதாக 12 இடங்களில் மாட்டு் தொழுவங்கள்: இந்தாண்டில் 2,300 மாடுகள் பிடிபட்டுள்ளன

சென்னை: சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில், சாலைகளில் கேட்பாரற்று திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து வருகின்றனர். முதல்முறை பிடிபடும் மாட்டிற்கு ரூ.5,000, இரண்டாம் முறை பிடிபட்டால் ரூ.10,000 வீதம் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பிடிபடும் மாடுகளை பராமரிக்க மாநகராட்சியிடம் போதிய இடம் இல்லாததால், அபராதத்துடன் மீண்டும் மாடுகள் விடுவிக்கப்படுகின்றன. இதனால், மாடுகள் சாலையில் திரிவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க, திறந்தவெளி இடங்களில் தொழுவம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்காக, மண்டல வாரியாக இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், மாடுகள் வளர்ப்போருக்கு, அவற்றை பராமரிக்க போதியளவில் இடங்கள் இருக்க வேண்டும். அப்போது தான், மாடுகள் வளர்க்க அனுமதிக்கப்படுவர். அவ்வாறு இடங்கள் இல்லாமல், பலர் கூவம், அடையாறு போன்ற நீர்நிலை ஓரங்களில் மாடுகளை பராமரித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மண்டல வாரியாக பொது தொழுவம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பொது தொழுவங்களில், குறைந்த வாடகையில், மாடுகளை பராமரித்துக் கொள்ள முடியும். மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் குறையும். தற்போது சென்னை மாநகராட்சியில் 300 பசுக்கள் மற்றும் எருமைகள் தங்குவதற்கு, ஏற்கனவே 2 மாட்டுத் தொழுவங்கள் உள்ளது. தற்போது கூடுதலாக 12 புதிய மாட்டு தொழுவங்கள் அமைக்கப்படவுள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் கட்டண அடிப்படையில் இந்த இடத்தை வாடகைக்கு எடுக்கலாம். இந்த ஆண்டு, அம்பத்தூர், மாதவரம், திரு.வி.க.நகர் ஆகிய இடங்களில், 2,308 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அபராதமாக ரூ.1 கோடி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதிதாக மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்பட்டால் மாடுகளை பராமரிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் மாடுகளை பராமரிக்க புதிதாக 12 இடங்களில் மாட்டு் தொழுவங்கள்: இந்தாண்டில் 2,300 மாடுகள் பிடிபட்டுள்ளன appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி