×

தினமும் காலையில் எழுந்தவுடன் 100 பொய்களை கூறுகிறார் மோடி: பிரகாஷ் ராஜ் தாக்கு

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி காலையில் எழுந்தவுடன் 100 பொய்களை கூறுகிறார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் திருவனந்தபுரத்தில் கூறினார். திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சசி தரூருக்கு ஆதரவாக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று பிரசாரம் செய்தார். அவர் நிருபர்களிடம் கூறியது: நம் நாட்டில் மிக முக்கியமான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக நமக்கு கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பாகும். மக்கள் எந்தக் காரணத்தை கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. பிரதமர் மோடி தன்னை ஒரு ராஜா என கருதிக் கொண்டிருக்கிறார். தன்னை எதிர்த்து யாரும் எதுவும் பேசக்கூடாது என்று அவர் கருதுகிறார். எதிர்ப்புக் குரல்களை அவர் விரும்புவதில்லை. பிரதமர் மோடி தினமும் காலையில் எழுந்தவுடன் 100 பொய்களை கூறுகிறார். விலைமதிப்புள்ள விதவிதமான ஆடைகளை அவர் அணிகிறார்.

மக்களின் வரிப் பணத்தில் தான் இதெல்லாம் கிடைக்கிறது என்பதை அவர் மறந்து விடுகிறார். எம்பிக்களை வாங்குவதற்கு பாஜவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தாகும். மதவாத வைரஸ் நோய் பரவாமல் இருக்க அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலில் யாரும் பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல ஒரு எம்பியை தேர்வு செய்தால் போதும். எம்பிக்கள் சேர்ந்து திறமையான ஒருவரை பிரதமராக தேர்வு செய்து கொள்வார்கள். நான் காங்கிரஸ்காரன் கிடையாது. ஆனாலும் ராஜாவை எதிர்த்து கேள்வி கேட்கும் சசி தரூருக்கு ஆதரவளிப்பதற்காக திருவனந்தபுரம் வந்துள்ளேன். திருவனந்தபுரத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் கர்நாடகாவிலிருந்து மூன்று முறை மேலவை எம்பியாக இருந்துள்ளார். ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு அவர் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கர்நாடகாவில் சீட் கிடைக்காததால் தான் அவர் திருவனந்தபுரத்திற்கு வந்து போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post தினமும் காலையில் எழுந்தவுடன் 100 பொய்களை கூறுகிறார் மோடி: பிரகாஷ் ராஜ் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Prakash ,Thiruvananthapuram ,Prakash Raj ,Congress ,Shashi Tharoor ,
× RELATED நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியான...