×

பினோச்சியோ (ஆங்கிலம்)

கடந்த ஆண்டு வெளிவந்து மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்ற படம். நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை பெற்றதும் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனால் இதனை தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

இரண்டாவது உலக போரில் தனது உறவினர்களை இழந்து வாழ்ந்து வரும் ஜெப்பட்டோ என்ற முதியவருக்கு அவரது பேரன் கார்லோதான் உலகம். தேவாலயங்களுக்கு இயேசுநாதர் சிலையை வடிவமைத்து தரும் வேலை செய்து வருகிறார். தாத்தாவுக்கு பேரன் உதவியாக இருக்கிறார். ஒரு நாள் சர்ச்சில் ஏசு சிலை வடிவமைக்கும் பணியில் இருந்தபோது எதிரி நாட்டினர் விமானத்தில் இருந்து வீசிய குண்டால் தேவாலயம் சிதைந்து போகிறது. சிறுவன் கார்லோ இறந்து விடுகிறான்.

அவனது நினைவாகவே இருக்கும் ஜெப்பேட்டோ, பைன் மரத் துண்டிலிருந்து ஒரு மரப்பொம்மை செய்து அதனை தேன் பேரனாக பாவிக்கிறார். தூய்மையான கார்லோவின் அன்பிற்காக அந்த பொம்மைக்கு உயிர் கொடுக்கிறார்கள் தேவதைகள். பேசும் மரப் பொம்மையால் அந்த ஊரே ஆச்சர்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஊரில் பொம்மலாட்டம் நடத்தும் ஒருவன் உயிருள்ள மரப்பொம்மையை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க நினைத்து மரப்பொம்மையை ஏமாற்றி தன்னுடன் அழைத்துப்போகிறான். பேரனைத் தேடி தாத்தாவும் செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

அனிமேஷன் படம் என்றாலும் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் குலிர்மோ டெல் டோரோ மற்றும் மார்க் குஸ்டஃபான். “இயேசுவையும் மரத்தால் செய்கிறீர்கள், என்னையும் மரத்தால் செய்தீர்கள். மக்கள் இயேசுவை வணங்குகிறார்கள் என்னை வணங்குவதில்லையே ஏன்?” என்று பொம்மை கேட்கிறது. “அவரை கண்டு மக்களுக்கு பயம், உன்னை கண்டு பயமில்லை. பயமே அவர்கள் பக்தி” என்கிறார் தாத்தா. இப்படி பெரிய விஷயங்களை கூட எளிதாக பேசுகிறது படம். போகிற போக்கில் முசோலியின் போர்வெறியையும் கிண்டல் செய்கிறது. குழந்தைகளுடன் அமர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

Tags : Oscars ,Netflix ,
× RELATED 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஜான்சீனா…!