×

அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும் நிரூபணம் அமைதியான முறையில் தேர்தல் முடிந்தது: பிரதமர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் என குவிந்த தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு; போலீசாருக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ்

சென்னை: தமிழகத்தில் சிறிய அசம்பாவிதச் சம்பவங்கள் கூட இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. ஏற்கனவே பிரதமர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்களின் பிரசாரங்கள், ரோடு ஷோக்கள் என அனைத்துக்கும் பாதுகாப்பு கொடுத்து போலீசார் அசத்தியுள்ளனர். போலீசாருக்கு தேர்தல் அதிகாரியே பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சிறிய அசம்பாவிதச் சம்பவங்கள் கூட இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் எப்போதுமே அமைதிப்பூங்காவாக திகழும் என்று கூறப்படுவதுண்டு. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு சட்டம் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

தமிழத்தில் தற்போது டிஜிபியாக சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் நியமிக்கப்பட்ட பிறகு, சட்டம் ஒழுங்கை மேம்படுத்த சிறப்பு உத்தரவுகளையும் வழங்கினார். போலீசாரின் நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இல்லாமல் நியாயமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும் இரு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டனர். இதனால் பல ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

ஏற்கனவே பல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கொடூர ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு 91 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதோடு, ரவுடிகள் பட்டியலில் உள்ள 5,230 பேர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, ஓராண்டுக்கு எந்த பிரச்னைகளிலும் ஈடுபடமாட்டோம் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நிபந்தனையை மீறினால் ஓராண்டுக்கு பினை இல்லாமல் சிறையில் இருக்க வேண்டும் என்பதால் மீண்டும் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டனர்.

இந்நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் பிரசாரங்கள் நடைபெற்றன. மேலும், எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னை, கோவையில் ரோடுஷோவிலும் ஈடுபட்டார். 2 முறை ராகுல் காந்தி தமிழகம் வந்தார். நெல்லை, கோவையில் பிரமாண்ட முறையில் பொதுக்கூட்டமும் நடந்தது. ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் தினமும் தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்றனர். அப்போது ஒரு தலைவரோடு மற்றொரு தலைவருடைய பிரசாரம் மோதல் ஏற்படாமல் திட்டமிட்டு பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. அதோடு போலீசாரின் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. வழக்கமாக எதிர்க்கட்சிகள் போலீசாரை குறை கூறுவார்கள். குற்றச்சாட்டுகளை எழுப்பி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வார்கள். தேர்தல் ஆணையமும் அதிகாரிகளை மாற்றிவிடும்.

ஆனால், இந்த தேர்தலில் போலீசாரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளால், திட்டமிட்ட நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகளால் போலீஸ் அதிகாரிகள் மீது எந்த புகாரும் கொடுக்க முடியவில்லை. இந்த தேர்தலின்போதுதான் ஒரு போலீஸ் அதிகாரி கூட ஏன், இன்ஸ்பெக்டர் அளவில் கூட மாற்றப்படவில்லை. அந்த அளவுக்கு குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் போலீஸ் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டனர். பல இடங்களில் போலீசாரே பணத்தை பறிமுதல் செய்தனர். அப்படித்தான் ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது.

மேலும், தேர்தலின்போது போலீசார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவுகளை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் பூத்துகளில் பாதுகாப்பு, ரோந்து செல்ல தனிப்படைகள், பிரச்னை ஏற்பட்டால் 4 பக்கங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து குவிவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழகத்தில் சிறு அசம்பாவிதச் சம்பவங்கள் கூட நடைபெறாமல் அமைதியான முறையில் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழகத்திற்கு எப்போதுமே அமைதியான மாநிலம் என்ற பெயர் உண்டு. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதால்தான், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதுவும் முதல் கட்டத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் 4 கட்டமாக நடக்கிறது. ஒடிசாவில் கூட 4 கட்டமாக நடக்கிறது. அதுவும் 4வது கட்டம் முதல் 7ம் கட்டம் வரையான காலத்தில் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் கடைசி கட்டத்தில்தான் தேர்தல் நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டத்திலும் தேர்தல் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. பீகாரில் உள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு 3வது கட்டத்தில்தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில்தான் ஒரே கட்டமாக அதுவும் முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் அமைதிப் பூங்கா என்பதை தேர்தல் ஆணையம் உணர்ந்துதான் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் நடவடிக்கையில் இறங்கியது. அதை தமிழகம் மீண்டும் நிரூபித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட இந்த தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை எழுப்ப முடியவில்லை. அதன் எதிரொலியாகத்தான் ஒரு அதிகாரி கூட மாற்றப்படவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

* தேர்தலின்போது போலீசார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவுகளை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் வழங்கியிருந்தார்.
* அதைத் தொடர்ந்து போலீஸ் பூத்துகளில் பாதுகாப்பு, ரோந்து செல்ல தனிப்படைகள், பிரச்னை ஏற்பட்டால் 4 பக்கங்களில் இருந்தும் அதிகாரிகள் வந்து குவிவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
* இதனால் தமிழகத்தில் சிறு அசம்பாவிதச் சம்பவங்கள் கூட நடைபெறாமல் அமைதியான முறையில் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.

The post அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும் நிரூபணம் அமைதியான முறையில் தேர்தல் முடிந்தது: பிரதமர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் என குவிந்த தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு; போலீசாருக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Minister ,Chief Minister ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...