×

18வது மக்களவை தேர்தல் தொடக்கம்; 102 தொகுதிகளில் 60 சதவீத வாக்குப்பதிவு: மேற்குவங்கத்தில் பல இடங்களில் வன்முறை சட்டீஸ்கரில் குண்டு வெடித்து வீரர் பலி

புதுடெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளில் 60.03 சதவீத வாக்குகள் பதிவானது. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுவை உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று ேதர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இதே போல் மக்களவை தேர்தலுடன் சிக்கிமில் 32 தொகுதிகளுக்கும், அருணாச்சல் பிரதேசத்தில் 60 தொகுதிகளுக்கும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு, அருணாச்சல், அந்தமான் நிக்கோபார் தீவு, அருணாச்சலபிரதேசத்தில் உள்ள ஒரு சில வாக்குச்சாவடிகளில் இவிஎம் இயந்திரங்கள் சரிவர வேலை செய்யாததால் பல இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.

* கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. அங்குள்ள தோங்ஜூ பகுதியில் திடீர் மோதல் வெடித்தது. பிஷ்னுபூர் மாவட்டம் மொய்ராங்கில் ஓட்டுப்பதிவு மையம் அருகே துப்பாக்கியுடன் வந்தநபர் சரமாரியாக வானை நோக்கி சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் பல பூத்கள் கைப்பற்றப்பட்டன.

அதே போல் இம்பால் மேற்கு மாவட்டத்திலும் , கிழக்கு மாவட்டத்திலும் சில இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தன. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கோங்மேன் என்ற பூத்தில் நடந்த மோதலில் இவிஎம் சேதம் அடைந்தது. பல இடங்களில் நடந்த மோதலில் மணிப்பூரில் மட்டும் 4 இவிஎம்கள் சேதம் அடைந்தன. மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் வாக்களிக்க வசதியாக, சிறப்பு வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

* அருணாச்சலில் கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள பாமெங் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. கிழக்கு கமெங், குருங் குமே, அப்பர் சுபன்சிரி மாவட்டங்களில் உள்ள மூன்று வாக்குச் சாவடிகளிலும் இவிஎம் சேதம் ஏற்பட்டது. எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

* மேற்குவங்கத்தில் கூச் பெஹர் தொகுதியில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பா.ஜ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நேரடியாக மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக திரிணாமுல் சார்பில் 80 புகார்களும், பாஜ சார்பில் 39 புகார்களும் கொடுக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் பூத் ஏஜெண்ட்கள் தாக்கப்பட்டனர்.

* சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் அதிகம் உள்ள பஸ்டர் மக்களவை தொகுதியில் பிஜப்பூர் பகுதியில் குண்டுவெடித்து சிஆர்பிஎப் உதவி கமாண்டன்ட் மற்றும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தனர். பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள உசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்காம் கிராமத்தில் தற்செயலாக ஒரு ஷெல் வெடித்ததில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். அவர் சிஆர்பிஎப் 196 வது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தேவேந்திர குமார் என்பது தெரியவந்தது. மாலை 3 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது 58.14 சதவீதம் பதிவாகி இருந்தது.

* அசாம் மாநிலத்தில் பல இடங்களில் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டன. அங்கு 150 இவிஎம் எந்திரங்கள் முற்றிலும் மாற்றப்பட்டன. இவை தவிர பல்வேறு இவிஎம்களின் விவிபேட்கள் மற்றும் வாக்குப்பதிவு அலகுகள் போன்ற 1025க்கும் மேற்பட்ட உதவி எந்திரங்களும் கோளாறுகள் காரணமாக மாற்றப்பட்டன. 330 சியூக்கள், 540 விவிபேட்கள், 155 பியூக்கள் மாநிலம் முழுவதும் மாற்றப்பட்டன.

* சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படாத ஜம்முவில் உதம்பூர் தொகுதியில் கொட்டும் மழையிலும் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த மாநிலங்கள் தவிர பீகார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, உபி, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

அப்போதும் வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கி ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது. இறுதியில் முதற்கட்டமாக 102 தொகுதியில் 60.03 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த ஓட்டுகள் ஜூன் 4ம் தேதி எண்ணி முடிவு அறிவிக்கப்படும். அப்போது இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா இல்லை மீண்டும் பிரதமராக மோடி தொடர்வாரா என்பது தெரியவரும்.

* நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தல் நடந்த 102 தொகுதியில் 73 பொதுத் தொகுதிகள், 18 எஸ்சி தொகுதிகள், 11 எஸ்டி தொகுதிகள்.

* 102 தொகுதியிலும் 1625 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1,491 பேர் ஆண்கள், 134 பேர் பெண்கள்.

* 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் முக்கியமானவர்கள்.

* நாடு முழுவதும் 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

* தேர்தல் பணிகளில் 18 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

* பிரதமர் மோடி அழைப்பு
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்து புதிய சாதனை செய்ய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது மற்றும் ஒவ்வொரின் குரலும் முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* 10 ஆண்டு காயத்திற்கு தைலம் பூசும் நாள்: ராகுல்
ராகுல்காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,’ இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு. நினைவில் கொள்ளுங்கள், உங்களின் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அதன் தலைமுறைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களில் உங்கள் வாக்கு தைலம் பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பைத் தோற்கடிப்பதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின் கடைகளை திறக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில்,’ மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் வாக்களிக்கும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எனது அன்பான குடிமக்களே, நீங்கள் கவனமாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீதி உங்களுக்கு காத்திருக்கும் எதிர்காலம். பொருளாதார அதிகாரம் மற்றும் சமத்துவத்தின் புதிய சகாப்தம் தொடர்பான வாய்ப்புகள் உங்களை அழைக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகால வேலையில்லாத் திண்டாட்டத்தின் தொடர்ச்சியை விட, வேலைப் புரட்சிக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இவிஎம்மில் அந்த பட்டனை அழுத்தும் போது, ​​நமது நாட்டின் அமைப்புகள் சர்வாதிகாரத்தின் மூலம் சிதைக்கப்பட வேண்டுமா அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமா என்பதை ஒரு நொடி இடைநிறுத்தி யோசித்துப் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இவிஎம்
மேலும் சாதியா பகுதியில் அமர்பூர் என்ற இடத்தில் மின்னணு எந்திரத்தை ஏற்றிச்சென்ற வாகனம் அங்குள்ள தியோபானி ஆற்றில் சிக்கியது. திடீரென வெள்ளம் அதிகரித்ததால் மின்னணு எந்திரங்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன. தேர்தல் அதிகாரிகள், டிரைவர் பத்திரமாக தப்பினர். அதைத்தொடர்ந்து புதிய எந்திரம் கொண்டு வர உத்தரவிடப்பட்டது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இவிஎம்மை மீட்கும் பணி தொடங்கியது.

* 48 தொகுதியில் காங்., பாஜ நேரடி போட்டி
நாடு முழுவதும் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், 48 தொகுதிகளில் காங்கிரஸ் – பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் முதற்கட்ட தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கூகுள் ‘டூடுல்’ மூலம் ‘மை’
இந்தியாவில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுவதால், அதனை கொண்டாடும் வகையில் கூகுள் தனது ‘டூடுல்’ மூலம் ‘மை’ வைக்கப்பட்ட விரலுடன் கூகுள் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் டூடுலின் இந்த பதிவானது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவை கவுரப்படுத்தும் வகையில் உள்ளது.

* இவிஎம் பற்றி பயப்பட வேண்டாம்: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் கூறியதாவது: இவிஎம் பற்றி பயப்பட வேண்டாம். தொழில்நுட்பம் சார்ந்த பெரிய அளவிலான பாதுகாப்புகள் நடைமுறையில் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. இது 100 சதவீதம் பாதுகாப்பானது. இந்த பிரச்னை நீதிமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. நாங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். இயந்திரங்களில் எதுவும் நடக்காது. இவிஎம்மில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. எனவே மகிழ்ச்சியாக வாக்களிக்க வேண்டும்.

* நாகாலாந்தில் 6 மாவட்டங்களில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை
நாகாலாந்து மாநிலத்தில் மக்களவை தேர்தலில் நேற்று 6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. எல்லைப்புற நாகாலாந்து பிரதேசம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று 6 மாவட்டங்களில் உள்ள 738 வாக்குச் சாவடிகளில் மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. அந்த 6 மாவட்டங்களில் உள்ள 20 எம்எல்ஏக்களும் கூட தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தவில்லை. இங்கு 4,00,632 வாக்காளர்கள் உள்ளனர்.

* வாக்குச்சாவடியில் வீரர் மரணம்
மேற்குவங்க மாநிலம் மாதபங்காவில் உள்ள வாக்குச்சாவடியின் குளியலறையில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. குளியலறையில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

The post 18வது மக்களவை தேர்தல் தொடக்கம்; 102 தொகுதிகளில் 60 சதவீத வாக்குப்பதிவு: மேற்குவங்கத்தில் பல இடங்களில் வன்முறை சட்டீஸ்கரில் குண்டு வெடித்து வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : 18th Lok Sabha Election ,West Bengal ,Chhattisgarh ,New Delhi ,18th Lok Sabha elections ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...