மேட்டுப்பாளையம், ஏப்.17: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ள சமயபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாலையை கடந்து மறுபுறம் பவானி ஆற்றிற்கு தண்ணீர் அருந்த சென்றுள்ளது. அப்போது, ஆற்றிற்கு செல்ல வழி தெரியாததால் ஒற்றைக்காட்டு யானை பிளிறியபடி ஊருக்குள் நுழைந்தது.
இதனையறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முற்பட்டனர். ஆற்றிற்கு செல்ல வழி தெரியாத காரணத்தால் ஊருக்குள் நுழைந்த யானை சற்று நேரத்தில் மீண்டும் வந்த வழியே மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோயில் பிரதான சாலையை கடந்து மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் பிளிறியபடியே சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
The post மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றைக்காட்டு யானை appeared first on Dinakaran.