×

10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவை சுடுகாடாக மாற்றியது பாஜக

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசார விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 10 வருட பாஜக ஆட்சி என்பது இந்தியாவை சுடுகாடாக மாற்றி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 3 வருடங்கள் ஆகிறது. கொரோனா மற்றும் இயற்கை இடர்பாடு, அதிமுக ஆட்சி கஜானா காலி, அரசுக்கு பணம் இல்லாமல் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கலான சூழ்நிலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உள்ளிட்ட நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டம், அரசு பேருந்தில் பெண்கள் கட்டண்ம் இல்லாமல் பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்து பாராட்டி வரும் திட்டமாக உள்ளது. 3 வருடத்தில் இத்தனை நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது தமிழ்நாடு அரசு. ஆனால் 10 வருட பாஜக ஆட்சியில் எவ்வளவோ செய்து இருக்கலாம். மத்திய அரசு நினைத்திருந்தால் விவசாயிகள் கடன்கள், வியாபாரிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்திருக்க முடியும்.

இந்த நாட்டை எவ்வளவோ முன்னேற்றி இருக்கலாம். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஏழை கூலி தொழிலாளிகளுக்கு ஒரு வேலை உணவு உறுதி செய்திருக்கலாம். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டு மக்களை பாதுகாத்து இருக்கலாம். இப்போது 10 நாட்களுக்கு ஒரு முறை மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். கேட்டால் தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் இருப்பதாகவும், தமிழ் மொழி மீது பற்று இருப்பதாகவும் கூறுகிறார். சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நிதியை வழங்கி உதவியிருக்கலாமே, அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் இல்லையா, வெள்ள நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு 37 ஆயிரம் கோடி கேட்ட போது 300 கோடியாவது கொடுத்திருக்கலாம். ஆனால் இதுவரை 30 பைசா கூட கொடுக்கவில்லை.

ஏழை எளிய மக்கள் பாதிக்கக்கூடிய வரியை போட்டு கொள்ளை அடிக்கின்ற கொலைகார கூட்டம் தான் பாஜக அரசு. மகளிர் தினத்தன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைத்த மோடி, ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வந்து கொண்டு தான் உள்ளது, அப்போதெல்லாம் ரூபாய் 100 விலையை குறைத்து இருந்தால் இப்போது கேஸ் சிலிண்டரை இலவசமாகவே கொடுத்திருக்கலாம். ரூபாய் 480க்கு விற்பனை செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்துக்கு மேல் உயர்ந்ததற்கு யார் காரணம், இவர்களுக்கு ஓட்டு போட்டால் சிலிண்டர் விலை ரூ.5,000 வரை உயர்த்துவார்கள். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய பாஜக அரசுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.

பாஜகவில் உள்ளவர்கள் ஊழலே செய்யவில்லையா? பாஜக மாநில முதல்வர்கள் ஊழலே செய்யாதவர்களா, சர்வாதிகார பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியா உலக நாடுகளுக்கே வழிகாட்டக்கூடிய நாடாக ஒரு மதசார்பற்ற நாடாக விளங்கி வருகிறது. இந்த நாட்டை குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் இவர்கள் கையில் சிக்கி உள்ளது. ராமர் கோயில் விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் வரவில்லை என மோடி கூறுகிறார்.

மோடியின் ஆட்சியில் மணிப்பூர் மாநிலம் எப்படி கலவர பூமியாக மாறியதோ அது போல் இந்தியா கலவர பூமியாக மாற வேண்டும் என்பதுதான் மோடியின் நோக்கம். பாஜக ஆட்சியின் சாதனை எல்லாம் அம்பானி, அதானி ஆகியோரை வளர்த்துவிட்டது தான். ஊழல் செய்த அனைவரையும் இவர்கள் உள்ளே பிடித்து போட்டு உள்ளார்களா? பல்லாயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ்மோடி ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக மற்றும் பாஜக இடையே 2வது இடத்துக்கு தான் போட்டி போட்டு வருகின்றனர். ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் பாஜக எதிர்ப்பு அலை வலுவாக உள்ளது. பாஜக அறிவிக்கின்ற வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பவர்களே தேர்தலில் போட்டியிடாமல் விலகி செல்கிறார்கள். பாஜக சாயம் வெளுத்து விட்டது. நாடு முழுவதும் பாஜக படுதோல்வி அடையும், ஜூன் 4ம் தேதி மோடி ஆட்சி முடிவுக்கு வரும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், என்றார்.

The post 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவை சுடுகாடாக மாற்றியது பாஜக appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,Marxist Communist Party ,State Secretary ,Balakrishnan ,Ulundurpet ,Ulundurpet, Villupuram ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...