×

ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் படையெடுப்பு.. நாமக்கல், ராஜபாளையத்தில் ரோடு ஷோ நடத்துகிறார்!!

சேலம்: மக்களவைத் தேர்தலையொட்டி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழ்நாட்டிற்கு படையெடுத்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி 6வது முறையாக 2 நாள் பயணமாக நாளை(9ம் தேதி) தமிழகம் வருகிறார். இதே போல ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக வர உள்ளனர்.அந்த வகையில், தேசிய பாஜக தலைவர் நட்டாவைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் இன்று தமிழகம் வந்துள்ளார்.

இதற்காக ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து நேராக ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி. கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லுக்கு சென்று ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார். இந்த ரோடு ஷோவானது நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கி, சேலம் சாலை சந்திப்பு, நேதாஜி சிலை மற்றும் பஸ் நிலையம் வழியாக நடைபெற்று மணிக்கூண்டு பகுதிக்கு சென்றடைய உள்ளது.

தொடர்ந்து நாகை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து திருவாரூரில் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்தும் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையத்தில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முதல் பஞ்சு மார்க்கெட் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தி, தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக ஜான் பாண்டியனை ஆதரித்து தென்காசியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரோடு ஷோ நடத்துவதாக அறிவித்து, அதன்பின் இருமுறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் படையெடுப்பு.. நாமக்கல், ராஜபாளையத்தில் ரோடு ஷோ நடத்துகிறார்!! appeared first on Dinakaran.

Tags : J. B. ,Union ,Minister ,Rajnath Singh ,Tamil Nadu Invasion ,Nata Namakkal ,Rajapalayam ,Salem ,Union Defence Minister ,Tamil Nadu ,People's Elections ,Puducherry ,J. ,
× RELATED மாலிவால் மீதான தாக்குதல் குறித்து...