×

அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு; 2025 முதல் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு

1. அரசியலமைப்பு (106வது) திருத்தச் சட்டம் பெண்களுக்கு பாஜ செய்யும் மாபெரும் துரோகத்தை குறிக்கிறது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதிக்கும். இந்த சட்டம் 2029க்கு பிறகுதான் செயல்பாட்டுக்கு வரும். இதில் உள்ள மோசமான விதிகளை நீக்கி, திருத்தம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரும். மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு 2025ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் அமலுக்கு வரும். 2029 மக்களவை தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2 2025 முதல் ஒன்றிய அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும்.

3 நீதிபதிகள், அரசு செயலாளர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், சட்ட அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளில் அதிக அளவு பெண்கள் நியமிக்கப்படுவார்கள்.

4 பாலின பாகுபாடு குறித்து ஆராயப்பட்டு சட்டவிதிகள் காங்கிரஸ் ஆட்சியின் முதல் ஆண்டில் நீக்கப்படும்.

5 ‘ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற கொள்கையை உறுதி செய்து பெண்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் தவிர்க்கப்படும்.

6 சுயஉதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை கணிசமாக அதிகரிக்கப்படும்.

7 பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலை, பணி செய்யும் இடங்களில் குழந்தை பராமரிப்பு சேவைகள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தடுத்தல், மகப்பேறு சலுகைகள் நீட்டிக்கப்படும்.

8 திருமணம், வாரிசு, தத்தெடுப்பு, பாதுகாவலர் உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்படும்.

9 புலம்பெயர்ந்த பெண்களுக்கு போதுமான இரவு தங்குமிடங்களை கட்ட மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். பெண்களுக்கான பொதுக் கழிப்பறைகள் நகரங்களில் அமைக்கப்படும். பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இலவச நாப்கின் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படும்.

10 ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு சாவித்ரிபாய் புலே விடுதி அமைக்கப்படும்.

11 ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண்களுக்கு உதவ சட்ட துணை அதிகாரி நியமிக்கப்படுவார்.

2019ல் கணித்தது அப்படியே நடந்தது

ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2019 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி 54 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் மோடி அரசின் முதல் 5 ஆட்சி குறித்தும், நமது அரசியலின் ஆபத்தான நிலை, பொருளாதாரம் ஆகியவை குறித்தும், பா.ஜவை மீண்டும் தேர்வு செய்தால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் நாங்கள் மக்களுக்கு முன்னறிவித்தோம். காங்கிரஸ் கட்சி 2019ல் கணித்த மதிப்பீடு உண்மை என்பதை நாடு நிரூபித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல பலவீனங்களும் துயரங்களும் அதிகரித்துள்ளன. அவை வருமாறு:

* இளைஞர்கள் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை விகிதம் 40% க்கும் அதிகமாக உள்ளது.

* விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று நாங்கள் கூறியிருந்தோம். விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து 16 மாதங்கள் தெருக்களில் போராட வேண்டியது வந்தது. இப்போது மீண்டும் அவர்கள் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர்.

* ஜிஎஸ்டியால் வியாபாரிகள் வியாபாரத்தை இழந்துள்ளனர்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளன. லட்சக்கணக்கான சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. இப்போது வேலைகளை உருவாக்குபவர்கள் இல்லை.

* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2014 முதல் 2022 வரை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

* தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பொருளாதார உரிமையை இழந்து விட்டனர். எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கான அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வனஉரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

* ஒன்றிய அரசின் ஒவ்வொரு அமைப்பும் அதன் சுதந்திரத்தை இழந்து விட்டன.

ஒவ்வொரு தொகுதியிலும் சமூக விளையாட்டு மையம்

* ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். இதில் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

* விளையாட்டு வீரர்களுக்கு பாகுபாடு, சார்பு, பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம், தவறானநீக்கம் ஆகிய பிரச்னைகளை தீர்க்க ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் தனி சட்ட அமைப்பு உருவாக்கப்படும்.

* ஒவ்வொரு தொகுதி மற்றும் நகராட்சியில் சமூக விளையாட்டு மையம் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

* திறமையான இளைஞர்களை ஊக்குவிக்க சர்வதேச அளவில், தேசிய அளவில் விளையாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், விளையாட்டு ஹீரோக்கள் வேலை உத்தரவாதம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சிறுபான்மையினருக்கு சலுகைகள்

1 மதசிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு பிரிவுகள் 15, 16, 25, 26, 28, 29,30ன் கீழ் அளிக்கப்பட்ட உரிமைகள் நிலைநிறுத்தப்படும்.

2 அரசியலமைப்பு பிரிவு 15, 16, 29,30 பிரிவுகளின் கீழ் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படும்.

3 கல்வி, வேலை வாய்ப்புகள், வணிகம், சேவைகள், விளையாட்டு, கலை மற்றும் பிற துறைகளில் சிறுபான்மையினர் மேம்பட உதவிகள் வழங்கப்படும்.

4 வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு உதவ மவுலானா ஆசாத் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.

5 இந்தியா முழுவளர்ச்சி அடைய சிறுபான்மையினர் பொருளாதார அளவில் மேம்பட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும்.

6கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விளையாட்டு, திறன்மேம்பாடு, கலாச்சார நடவடிக்கை ஆகியவற்றில் பாகுபாடு இல்லாமல் சிறுபான்மையினர் பங்கு பெறுவது உறுதி செய்யப்படும்.

7 ஒவ்வொரு குடிமகனைப் போலவே சிறுபான்மையினருக்கும் உடை, உணவு, மொழி தேர்வு செய்யும் சுதந்திரம் இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும்.

8 அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அதிக மொழிகளைச் சேர்ப்பதற்காக நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

100 நாள் வேலை திட்ட சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்

* மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருநாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் வகுப்பறைகள், நூலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டவும் அனுமதி அளிக்கப்படும்.

* நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கும் வகையில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அடிப்படையில் பிடிஎஸ், ஐசிடிஎஸ், மதிய உணவு திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படும்

* மானிய விலையில் உணவு வழங்கும் இந்திரா கேன்டீன்கள் திறக்கப்படும்.

* அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

* தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.400ஆக மாற்றப்படும்.

 

மூத்தகுடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை

1.மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்று திறனாளிகள் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு மாதம்தோறும் பென்சன் அடிப்படையில் ரூ.200 முதல் ரூ.500 வரை நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதி இனிமேல் ரூ.1000ஆக உயர்த்தப்படும்.

2.மூத்த குடிமக்களை புறக்கணிப்பு, அவதூறு, கைவிடுதல், வீட்டை விட்டு வெளியேற்றுவது, நிதிமோசடி செய்தால் உரிய சட்ட சேவைகள் வழங்கப்படும்.

3.பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் 2007ல் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும்.

4.மூத்த குடிமக்களுக்கு ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

5.பிரெய்லி ஸ்கிரிப்ட் அங்கீகரிக்கப்படும்.

6.சிறப்பு குழந்தைகளுக்காக தேசிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

7.உள்ளாட்சி அளவில் அரசு வேலைகளில் மாற்று திறனாளி நபர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

8.நாடு முழுவதும் மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும்.

9.தன்பாலின தம்பதிகளை அங்கீகரிக்க சட்டம் கொண்டு வரப்படும்.

The post அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு; 2025 முதல் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Assembly ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...