சென்னை: பிரதமர் மோடி முதல் பாஜ நிர்வாகிகள் வரை அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் விதிகளை மீறுகின்றனர், என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: 10 ஆண்டு கால பாஜ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் கொந்தளிப்பில் உள்ளனர். சமீபத்தில் தமது விருப்பத்தின்படி புதிதாக இரு தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்தார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடி முதல் பாஜவின் நிர்வாகிகள் வரை அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் விதிகளை மீறுகின்றனர். இதை கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். ஒட்டுமொத்தமாக 140 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்ற சூழல் பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறி வந்த பாஜ, சில தினங்களாக அமைதி காத்து வருகிறது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டை இணைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்தப்படும் என்றால், அது தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும். தேர்தலை நேர்மையாக நடத்த நினைத்தால், ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்துடனும் ஒப்புகைச் சீட்டை இணைக்க வேண்டும். இதற்கு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நாடே எதிர்பார்க்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடி, பாஜ நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் விதிகளை மீறுவதா? காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.