×

தெலங்கானாவில் பரபரப்பு!: பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்..போலீஸ் விசாரணை..!!

ஆந்திரா: தெலங்கானா மாநிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நந்திகொண்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அங்கேயே சிறிய அளவிலான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அந்த தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் பயன்பாட்டிற்காக தொட்டியில் இருந்து திறக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள், நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில், நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியில் இறங்கி பார்த்த போது அழுகிய நிலையில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் செத்து மிதந்துள்ளன. இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை நிறுத்திவிட்டு செத்து மிதந்த குரங்குகளை வெளியே எடுத்தனர். தண்ணீர் குடிக்க தொட்டிக்குள் இறங்கிய குரங்குகள் மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டிருப்பதால், அந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்குகள் செத்து மிதந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து நந்திகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தெலங்கானாவில் பரபரப்பு!: பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகள்..போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Andhra ,Nandikonda ,Nalakonda district ,Telangana state ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து