திருத்தணி, ஏப்.2: திருத்தணியில் அதிமுக வேட்பாளர் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பேரணியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டதால், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். அவர், நேற்று காலை திருத்தணி நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் அதிமுக, தேமுதிக கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். பிரசாரத்தின்போது, 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பேரணியாக சென்றனர்.
இதனால் அரக்கோணம் சாலையில் அதிமுகவினர் இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முடங்கியது. பள்ளி கல்லூரி பேருந்துகள் உட்பட ஏராளமான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுகவினர் கண்டுகொள்ளாமல் நகரின் முக்கிய பகுதிகளில் பைக் பேரனையாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். போக்குவரத்து சரி செய்ய காவலர்கள் இல்லாததால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி அதிமுகவினர் அதிகளவில் கட்சி கொடிகள் நடப்பட்டு இருந்ததும், அதிகளவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பேரணியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
The post 200க்கும் மேற்பட்ட பைக்குகளுடன் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம்: திருத்தணியில் கடும் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.