×

ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது அதிகாரிகளுடன் அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்: பேச்சுவார்தைக்குப் பிறகு அகற்றம்

திருத்தணி: திருத்தணி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது அதிகாரிகளுடன் அதிமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேச்சுவார்தைக்குப் பிறகு அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர். மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் அரசு நிலம் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட சவுக்கு மர கொம்புகள் அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈட்பட்ட போது தாசில்தாருடன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் தலையாரி தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அருகில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சவுக்கு மர கொம்புகளை அடுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருத்தணி கோட்டாட்சியருக்கு புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பாலாஜிக்கு தாசில்தார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினார். இருப்பினும் சவுக்கு மரக் கொம்புகளை அவர் அகற்றாததால், தாசில்தார் மலர்விழி தலைமையில், வருவாய்த் துறையினர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சவுக்கு மர கொம்புகளை நேற்று அகற்றச் சென்றனர். உதவி காவல் ஆய்வாளர்கள் குணசேகர், ராக்கிகுமாரி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பு சவுக்கு கொம்புகளை அகற்ற ஒரு நாள் அவகாசம் கோரப்பட்டது. இருப்பினும் கூடுதல் அவகாசம் தர மறுத்த தாசில்தார் உடனடியாக சவுக்கு கொம்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் சவுக்கு கொம்புகளை மட்டும் அகற்ற உத்தரவிடுவது ஏன் என்று தாசில்தாருடன் பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சவுக்கு கொம்புகளை அப்புறப்படுத்தினர். சவுக்கு கொம்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தாசில்தாருடன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது அதிகாரிகளுடன் அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்: பேச்சுவார்தைக்குப் பிறகு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruthani ,ADMK ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்