திருப்போரூர், ஏப்.2: தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலியால், பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கிரையம், அடமானம், குடும்ப செட்டில்மெண்ட், உயில், வங்கி கடன் போன்ற ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர். பொதுவாக ரியல் எஸ்டேட் தொழிலில் கணிசமாக கருப்பு பணம் புழக்கத்தில் இருக்கும்.
அண்மைக்காலமாக இந்த தொழிலில் சிறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முதற்கொண்டு டாடா, கோத்ரேஜ், டிஎல்எப் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் இறங்கி உள்ளன. வீட்டு மனைகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறக்கிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை, ஜிஎஸ்டி சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகியவற்றில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஓஎம்ஆர் சாலையில் மட்டும் சுமார் 10 லட்சம் அடுக்குமாடி வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி வில்லா எனப்படும் தனி வீடுகள், வீட்டு மனைகள் போன்றவையும் மக்களிடம் பல்வேறு தள்ளுபடிகளை வழங்கி விற்பனை செய்யப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை பொருத்தவரை அதில் வழங்கப்படும் கிளப் ஹவுஸ், மினி தியேட்டர், ஷாப்பிங் மால், நீச்சல் குளம் போன்றவை இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளே அதிகம் விற்பனையாகின்றன.
அதிக ரியல் எஸ்டேட் வீட்டு மனைப்பிரிவுகள் பதிவு செய்யப்படும் நீலாங்கரை, திருப்போரூர், கூடுவாஞ்சேரி, பெரும்புதூர் ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் எப்போதும் பிசியாக இருக்கும் சராசரியாக 100 முதல் 240 ஆவணங்கள் வரை இந்த அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகிறது. திருப்போரூர் சார் பதிவகம் சனிக்கிழமைகளிலும் இயங்கும் வகையில் செயல்படுகிறது. தற்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், ரியல் எஸ்டேட் தொழிலில் சற்று தேக்கம் நிலவுகிறது. வங்கி கடன் பெற்று விற்கப்படும் சொத்துக்களுக்கான ஆவணங்கள் மட்டுமே பதிவுக்கு வருகின்றன.
கிராமப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் தனி வீட்டு மனைகள், வில்லா வீடுகளின் விற்பனை 90 சதவீதம் நின்று போயுள்ளது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு செல்ல தயங்குகின்றனர். முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக்கட்டணம், நிலத்தரகர் கமிஷன், விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கிரையத்தொகை போன்றவற்றில் கணிசமாக பணப்புழக்கமே அதிகமாக இருக்கும். அரசு கட்டணங்கள் வங்கி மூலமும், ஆன்லைன் மூலமும் செலுத்தப்பட்டாலும் முத்திரைத்தாள்களை வாங்கி அவற்றில் ஆவணங்களை தட்டச்சு செய்து பதிவு செய்வதையே பொதுமக்கள் பெரும்பான்மையாக விருப்பம் தெரிவிக்கின்றனர்.
தற்போது காவல்துறை, தேர்தல் ஆணையம், பறக்கும் படை என பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பல கட்ட சோதனைகள் நடத்தப்படுவதாலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் உடனடியாக அந்த பணம் பறிமுதல் செய்யப்படுவதாலும், பொதுமக்கள் பத்திரப்பதிவு செயல்பாடுகளை ஏப்ரல் மாதம் 19ம்தேதி வரை நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக நீலாங்கரை, கூடுவாஞ்சேரி, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பெரும்புதூர் போன்ற சார்பதிவகங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு டோக்கன்கள் முழுவதுமாக புக்கிங் செய்யப்பட்டு விடும்.
அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 10 முதல் அதிக பட்சம் 50 ஆவணங்கள் வரை பதிவு செய்வர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக ஒரு நாளைக்கு மொத்தமாக 200 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு அலுவலகத்தில் 20 ஆவணங்கள் கூட பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்பே மீண்டும் வழக்கமான பரபரப்புக்கு பதிவுத்துறை அலுவலகங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி வெறிச்சோடிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் appeared first on Dinakaran.