×

காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!

காலம் என்பது அற்புதமானது. ஒவ்வொரு மனிதனின் செயலையும் காலம் தீர்மானிக்கிறது. காலத்தைப் பற்றிய ஞானம் இல்லாத மனிதன் தன்னுடைய பிறப்பின் நோக்கத்தையே இழந்துவிடுகின்றான், என்பதுதான் உண்மை. மனிதனுக்கு மட்டுமல்ல. பிரபஞ்சத்தின் அத்தனை நகர்வுகளையும் காலம் தெளிவாகத் தெரிவிக்கின்றது. விதை முளைப்பதும், முளைத்த விதை செடியாவதும், இலை விடுவதும், கிளை விடுவதும், மொட்டாவதும், மலராவதும், காயாவதும், கனியாவதும் காலத்திலே நடக்கக்கூடிய செயல்கள்தான். வசந்த காலத்தில், பூக்கள் மலர்கின்றன. இலையுதிர் காலத்தில், இலைகள் உதிர்கின்றன. வளர்வதற்கும் உதிர்வதற்கும் இடைப்பட்ட காலம்தான் மரத்தின் பயனைத் தெரிவிக்கின்றது.

இது மரத்திற்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும்தான்.காலம் என்பது நமக்குச் சில விஷயங்களை மறைமுகமாக சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது. அதனை நன்றாக உணர்ந்துவிட்டால், அந்தந்த காலத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ, அந்தந்தச் செயலைச் செய்து நாம் பிறந்ததன் பலனை அடையமுடியும். அதற்காகத்தான், வாழ்வின் காலத்தை நான்கு தர்மங்களாக, நான்கு நிலைகளாகப் பிரித்து வைத்தார்கள். தசரதன் பத்துத் தேரையும் ஓட்டும் சக்தி படைத்த சம்பராசுரன் என்கிற அசுரனை வென்றான். அதனால், அவனுக்கு தசரதன் என்கிற பெயர். அவனை வெற்றி கொள்பவர்கள் யாருமே இல்லை என்று விஸ்வாமித்திரரே சொல்லுகின்றார்.

`என்னனைய முனிவரரும் இமையவரும்
இடையூறொன்றுடையர் ஆனால்
பன்னகமும் நகு வெள்ளிப்பனிவரையும்
பாற்கடலும்பதும பீடத்
தன்நகரும் கற்பக நாட்டணினகரும்
அணிமாட அயோத்தி என்னும்
பொன்நகரும் அல்லாது புகலுண்டோ?
இகல்கடந்த புலவு வேலோய்!’

தேவேந்திரனுக்கும் ஒரு பிரச்னை என்று வருகின்ற பொழுது அவன் மகாவிஷ்ணுவையும் பரமசிவனையும் சென்று பார்ப்பான். முடியாதபொழுது அவன் உன்னிடத்திலே வந்து உதவியைக் கேட்பான். அந்த உதவியை நீ செய்ததால்தான் இந்திரன், தன்னுடைய பதவியிலே நிலைத்து இருக்கின்றான். இப்படிச் சொல்வதால் தசரதனுடைய ஏற்றம் தெரிகிறது. அவனுடைய ஆட்சியிலே எந்த விதமான குறைகளும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட தசரதன், தான் இனி அடுத்த நிலையான வானப்பிரஸ்தத்திற்குச் (காடு வாழ்க்கை) செல்ல வேண்டும். தன்னுடைய குமாரனாகிய ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றான். இந்த எண்ணம் ஏன் வந்தது என்றால் தொடர்ச்சியாக அவனுடைய உள்ளத்திலே நிகழ்ந்த மாற்றங்கள், மாற்றத்தை விளைவித்த சகுனங்கள், சம்பவங்கள்.

முதலிலேயே விஸ்வாமித்திரனோடு ராமனை தாடகையை எதிர்ப்பதற்காகவும் யாகத்தை காப்பதற்காகவும் அனுப்புகின்றபொழுது அவன் தயங்குகின்றான்.“என்னுடைய பிள்ளை சின்னப்பிள்ளை. அவனுக்கு என்ன தெரியும்? யுத்தக் கலைகளை எல்லாம் முழுமையாகப்பயிலாதவன். ஆனால், நான் சம்பராசுரனையே வென்றவன். நான் வருகிறேன். 16 வயது நிரம்பாத பாலகனை எதற்காக நீங்கள் கேட்கிறீர்கள்?’’ என்றெல்லாம் கேட்கின்ற பொழுது, ராமனைப் பற்றி அவன் சரியாக தெரிந்து கொள்ளவில்லை. அவனுடைய தகுதியைப் பற்றி தசரதன் அறியவில்லை. தன்னுடைய அன்புக்குரிய பிள்ளை; அதுவும் தவமிருந்து பெற்ற பிள்ளை என்பது மட்டும்தான் அவனுடைய மனதிலே ஓங்கி நிற்கிறது.எல்லா பெற்றோர்களுக்கும் ஏற்படுகின்ற ஒரு விஷயம்தான் இது. இன்றைக்கும் பெற்றோர்கள் எல்லாமே, அவன் எத்தனை வளர்ந்த குழந்தையாக இருந்தாலும்கூட, “அவனுக்குஎன்ன தெரியும்? என்னுடைய குழந்தை பாவம்’’ என்றுதான் தாயும் தந்தையும் நினைப்பார்கள்.

அதைத் தான் சாதாரண தந்தையாக இருக்கக்கூடிய தசரதனும் நினைக்கின்றான். ஆனால், தாடகையை வதம் செய்து, விஸ்வாமித்திரனுடைய யாகத்தைக் காத்து, அகலிகைக்கு சாபவிமோசனம் தந்து, யாராலுமே முறிக்க முடியாத சிவதநுஸை (வில்) முறித்து, சீதையைக் கரம் பிடித்து, என ராமன்செய்கின்ற சாதனையைப் பார்த்த உடனே, “இனி பட்டாபிஷேகத்திற்கான தகுதி, தன்னுடைய மகனாகிய ராமனுக்கு வந்துவிட்டது’’ என்கின்ற முதல் விதை விழுகின்றது.அந்த விதை விழுகின்ற பொழுதே தன்னைவிட பலசாலியாகத் தன்னுடைய குமாரன் இருக்கின்றான்; இந்த நிலையிலே, தான் பலவீனமாகிக் (வயதால் தளர்ந்து) கொண்டிருக்கிறோம் என்பதும் அவனுக்குத் தெரிகிறது. மகன் வளரவளர, தந்தை உடல் பலம் குறைந்து கொண்டே இருக்கும்.

என்பதுதான் உலக விதி. சீதை – ராமன் திருமணம் முடிந்த உடனே சில அபசகுனங்கள் அவனுக்கு அச்சத்தைத் தந்து, மருள வைக்கிறது. அதற்குப் பிறகு, காலன் போல், பரசுராமன் வந்து நிற்கிறான். தான் பரசுராமரிடத்திலே தோற்று விடுவோம். சம்பராசுரனை வென்று இந்திரனுக்கே பதவி கொடுத்த தான், இந்த பரசுராமனை எப்படி எதிர்த்து நிற்கப் போகிறோம் என்ற தயக்கம் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றது. வயது ஆகஆக தைரியம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். அதுவும் தசரதனுக்கு நிகழ்கிறது.அதனால், இனி அடுத்த நிலையான வானப்பிரஸ்த நிலைக்குப் போக வேண்டும்; இதுவரை சுமந்த இந்த அரசாட்சி என்கிற பாரம், இப்பொழுது அதிகம் அழுத்துவதாக அவனுக்குத் தெரிகிறது. இதற்குப் பிறகு மூன்றாவதாக ஒரு நிகழ்வு. ஒரு நாள் கண்ணாடியிலே தன்னுடைய முகத்தைப் பார்க்கிறான். அப்பொழுதுதான் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கிறான். அது இயற்கை அவனுக்கு அனுப்பிய மூன்றாவது செய்தி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அவனுடைய காதோரத்திலே இதுவரை இல்லாதபடிக்கு ஒரு வெள்ளி மயமான நரைமுடி தெரிகிறது. காதோரம் நரைத்த முடி யானது தசரதனுக்கு ஒரு செய்தியை சொல்லுகிறது.“ஏ தசரதா! நீ இத்தனை ஆண்டு காலம் இந்த உலகத்தைக் காப்பாற்றினாய். வீரத்தோடு இருந்தாய். இந்த உலகில் என்னென்ன எல்லாம் அனுபவிக்க வேண்டுமோ, அதையெல்லாம் அனுபவித்தாய். ஒரு குறையும் இல்லாமல் நீ அனுபவித்த அற்புதமான வாழ்க்கையை உன்னுடைய மக்களையும் அனுபவிக்கச் செய்தாய். ஆனால், இப்பொழுது உனக்கு ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன். காதோரம் நரைத்த முடியின் மூலம் நான் தெரிவிப்பது என்ன என்று சொன்னால், இனியும் இவ்வுலக வாழ்க்கையை, உண்டதே உண்டு உறங்கியதே உறங்கிக் கிடக்காதே. எழு. அடுத்த நிலையான ஆத்ம வஸ்துவை அறியக்கூடிய நிலைக்குச் செல். வாழ் நாளை, இனியும் வீணாக்காதே. அடுத்து உன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லாமல் இருந்தால் சரி; ராமன் வந்து விட்டான். ராமனிடத்திலே பொறுப்பை கொடுத்துவிட்டு நீ ஓய்வெடுத்துக் கொள்.’’ என்று சொல்லாமல் சொல்லுகின்றது அந்த நரைத்த முடி.

தேஜஸ்வி

The post காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி! appeared first on Dinakaran.

Tags : Gadoram ,
× RELATED ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி – மதி – கதி