×

ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி – மதி – கதி

வாழ்க்கை என்பது என்னவென்றால், அது கர்மா எனும் விதியின் எச்சம் எனச் சொன்னால் அது மிகையில்லை. உண்மையில் வாழ்க்கை என்றால், என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், ஏதோ ஓர் இயக்கத்தின் பின்னால் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே வாழ்க்கை என்றால் அது அனுபவமாகும். நாம் எப்படி வாழணும் என்பதை வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்வதே இல்லை. இதெல்லாம் தவறு. இதையெல்லாம் நாம் செய்திருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்து, ஒருவன் தன்னை மாற்றிக்கொள்ள முனையும்பொழுது, அவன் வாழ்வின் முடிவின் விழிம்பிற்கு வந்து நிற்கிறான் என்பதுதான் நிதர்தனமான உண்மை. அங்குதான் விதி வந்து நிற்கிறது. உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அல்லது நம்பிக்கை இருந்தோ அல்லது நம்பிக்கை இல்லாமலோ அனைவரும் விதி என்ற கர்மாவில் அகப்பட்டுக் கிடக்கிறோம்.

வாழ்க்கையில் நாம் பலவற்றை கற்றுக் கொள்கிறோம். மேலும், கற்றுக்கொண்டே இருக்கிறோம். தவறுகளுக்கும், பிரச்னைகளுக்கும் காரணம், ஒருவருக்கு நேரம் சரியில்லாத பொழுது அவசரப்படுவதால் ஏற்படும் பின்விளைவுகள்தான் என்பதை எவரும் உணர்வதில்லை. அப்பொழுது யாரோ ஒருவர் சொன்னாலும் கேட்கும் நிலையில் அந்த நபர் இருப்பதில்லை என்பதே உண்மை. அப்போது, அங்கே விதி வேலை செய்கிறது என்பது பொருள். விதி என்ற ஒன்று இருக்குமானால் ஏன் ஜோதிடம் பார்க்க வேண்டும்? இன்றைய வாழ்வானது அவசர கதியில் இருக்கிறது. எல்லாம் நினைத்தவுடன் முடிந்துவிட வேண்டும் என்ற வேகம் இருக்கிறது. நடக்காவிட்டால், கோபம் ஏற்படுகின்றது. ஒரு காரியம் நிச்சயித்த காலத்தில்தான் முடியவேண்டும் என்ற விதி இருந்தால், அதற்கான பொறுமை, காத்திருப்பு மிக அவசியம். அதனை சூட்சமமாக ஒருவனுக்கு புரியவைத்து, இக்காலத்தில் இது நடைபெறும் என்ற இதம் சொல்பவன்தான் ஜோதிடன்.

விதி – மதி – கதி

விதி நன்றாக அமைந்தால் அது சிறப்பான ஜாதகம். விதி கெட்டால் மதியைப்பார்! மதி கெட்டால் கதியைப் பார்! என்ற வழக்கு மொழி உண்டு. விதி என்பதை நீங்கள் இறந்த காலம் என்பதாகவும், மதி என்பதை நிகழ்காலம் என்றும், கதி என்பதை எதிர்காலம் என்றும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில் விதி – மதி – கதி என்ற அமைப்புண்டு. விதி என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்ட பலனாகப் பார்க்கப் படுகிறது. மதி என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பலனாகப் பார்க்கப்படுகிறது.கதி என்பது கதிர் என்ற சூரியன். ஆத்மகாரகன் என்று சொல்லக் டிய சூரியனை அடிப்படையாக வைத்து பலன் சொல்லப்படுவதாக உள்ளது. இந்த மூன்றின் அடிப்படையில்தான் பலன்கள் நிர்ணயமாகின்றன.

நாம் பிறந்த லக்னம்தான் விதியாக அமைகிறது. இதை வைத்துதான் நமது குடும்பம், தாய், தந்தை, நமது சுற்றத்தார் ஆகியவைகளை முடிவு செய்கின்றது. இதை ஜாதகரால் முடிவு செய்யலாகாது. இது விதியின் அடிப்படையில் அமைவது. மாறாதது நம்மால் மாற்றம் செய்ய முடியாதது. இதெல்லாம் நடக்கும் என்று முடிவாகிவிட்டால், அதனை நம்மால் மாற்ற முடியாது என்பது விதி. விதி என்ற லக்னத்தை அடிப்படையாகக் கொண்ட கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் கிரகங்கள் நல்லபடியாக அமைந்தால், அது சிறப்பான ஜாதகம். இல்லையென்றால் விதி கெட்டது என்று பொருள். விதி கெட்டுவிட்டால் அடுத்து மதியைப் பார்க்க வேண்டும். மதி என்பது சந்திரனை குறிப்பதாகும். சந்திரனை லக்னமாக கொண்டு ஜாதகத்தை பார்ப்பதாகும்.

அதாவது நிகழ்கால கோட்சார நிலை என்பதே சந்திரனாகும். நிகழ்காலத்தை நீங்கள் கண்டறிய சந்திரனே உங்களுக்கு வழிகாட்டு ஒளிவிளக்காக இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த மதியை பற்றி பேசும் பொழுது, மதியாகிய சந்திரனின் நிலையை பார்க்க வேண்டும். அதாவது, சந்திரன் வளர்பிறையில் இருக்கிறானா? அல்லது தேய்பிறையில் இருக்கிறானா? சந்திரனை எந்தெந்த கோள்கள் தொடர்புகொள்கின்றன. அதனால், சந்திரன் நிலை என்னவாக இருக்கிறது என்பதை நாம் முடிவு செய்தல் ஆகும். ஒரு சாதாரண நிலையில் ஒரு ஜாதகர் எப்படி முடிவெடுக்கிறார் என்பதே மதி. மதியை அடிப்படையாகக் கொண்ட திசா, புத்திகள் சிறப்பானதாக இருந்தால், விதி கெட்டாலும் மதி மூலம் வாழ்க்கை எனும் பெருங்கடலை கடந்து விடலாம். கதி என்பது சூரியனை லக்னமாக கொண்டு உங்கள் எதிர்காலத்தை கணிப்பதாகும்.

அது வலிமையாக இருந்தால், உங்கள் வாழ்வும் வளமாகும் என்பதாகும். மாற்றமுடியாத விதியாலும் மாற்றக்கூடிய மதியாலும் நமக்கு கிடைக்கும் முழுப் பலாபலனே கதியாகும். அதாவது, விதி – மதி அல்லல் ஏற்பட்டு எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்வை அமைதியாக கடந்து, கடவுளின் அனுக்கிரகத்தோடு நிகழ்வாழ்வை நகர்த்தினோமானால், அதன் விளைவே கதியாக இருக்கிறது என்பது உண்மை. இந்த கதியானது மறைமுகமாக விதியோடு தொடர்பில் உள்ளது எனப் பொருள் கொள்ளலாம். ஆகவே, விதியானது எங்கெங்கோ சுற்றி நாம் எல்லாவற்றையும் முடித்து தப்பித்துவிட்டோம் என்ற நிலைக்கு நம் எண்ணத்தையும் அறிவையும் இயக்கி, இறுதியில் விதி என்ன? கூறியதோ அதில் முடிக்கும் என்பதே முடிவாகும். ஆகவே, எது நடந்தாலும் இறைவனை சரணடைதலே முழுமையான துன்பங்களுக்கு விடுதலையாகும். நீங்கள் உங்கள் பிரச்னைகளை துன்பங்களை இறைவனிடம் ஒப்படையுங்கள். எல்லாம் ஒழுங்குபடும். ஆம், எல்லாம் இறைவன்தான் எந்த தேவதையிடம் யாரிடம் பிரச்னை ஒப்படைப்பது? என்ற கேள்வி வரும். ஜோதிடன் என்ற வழிகாட்டி வழியாகத்தான் அந்த தேவதையை கண்டறிதல் முடியும். யாருக்கு எந்த தேவதை விரைவாக தீர்வு சொல்லும் என்பதை இயற்கை அறிவியல் என்ற ஜாதகம்தான் முடிவு செய்கிறது. 

கலாவதி

The post ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி – மதி – கதி appeared first on Dinakaran.

Tags : Kathi ,
× RELATED நம் வீடு… நம் ஊர்… நம் கதை…