×

காஞ்சிபுரத்தில் கணபதி வழிபாடு

கல்வியே கரையிலா கச்சி என்று திருஞானசம்பந்தரால் போற்றிப் புகழப் பெற்ற திருத்தலம் காஞ்சி புரம். முத்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மை பெற்றதும் இதுவாகும். இத்தலத்தில் சிவன், திருமால், முருகன், கொற்றவை, காளி எனப் பல்வேறு தெய்வங்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அவற்றுள்ளும் அதிகமாக எழுந்தருளியிருப்பவர் விநாயகப் பெருமானே ஆவார். இத்தலத்தில் அவர் பல்வேறு பெயர்களில் சிறப்புடன் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார். அவற்றில் சிறப்பு மிக்க வரலாறுகள் சிலவற்றை இங்கே காணலாம்.

திருக்கச்சி அனேக தங்கா பதம்

விநாயகர் காஞ்சிக்கு வந்து சிவபெருமானைப் பூசித்துப் பேறு பெற்றார். அவர் வழிபட்ட திருத்தலம் திருக்கச்சி அனேக தங்காபதம் ஆகும். அநேகதர் என்பது விநாயகருக்கு உரிய பெயர்களில் ஒன்றாகும். இப்பெயருடன் அவர் இமய மலைச்சாரலிலும் இங்கேயும் சிவ வழிபாடு செய்து பேறு பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடத்தின் சிறப்பு பற்றி கச்சி என்று அடைமொழி சேர்த்து கச்சி அனேக தங்காபதம் என இத்தலம் அழைக்கப்படுகிறது. கௌரிதேவி நாகலோகப் பெண்ணாக அவதாரம் செய்த போது இங்கு வந்தாள் என்றும், சிவபெருமான் அவளைச் சேர்ந்து விநாயகரைத் தோற்றுவித்தார் என்றும், கூறுகின்றனர். இதைக் குறிக்கும் சிற்பமொன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயப் பதினாறுகால் மண்டபத் தூணில் உள்ளது. இந்த ஆலயம் புத்தேரி தெருவுக்கு அருகில் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் தனித்து அமைதியான சூழலில் உள்ளது.

பஞ்ச சந்தி விநாயகர்

பஞ்சாயதனம் என்னும் வழிபாட்டு முறை சமய உலகில் புகழ் பெற்றதாகும். சூரியன், திருமால், பராசக்தி, விநாயகர், சிவபெருமான் ஆகிய ஐவரையும் ஒன்றாக ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுவதே பஞ்சாயதனம் என்பர். இதிலே சிவபெருமானை நடுவிலும் மற்றவர்களைச் சுற்றி நான்கு (கோண) திசைகளில் வைத்து வழிபடுவர். இதற்குச் சிவபஞ்சாயதனம் என்பது பெயர். கணபதியை நடுவில் வைத்து அவருக்கு ஈசானத்தில் சிவபெருமானையும் அக்னி கோணத்தில் பராசக்தியையும், நிருதி கோணத்தில் சூரியனையும், வாயு கோணத்தில் திருமாலையும் வைத்து வழிபடுவது கணேச பஞ்சாயதனம் என்பர். இங்கே நாம் காணப்போவது வேறு வகையான பஞ்சாயதனம்.இங்கே நடுவில் வடக்கு நோக்கி தன் ஆலயத்தில் விநாயகர் வீற்றிருக்கின்றார். அவரைச் சுற்றி துர்க்கை, சூரியன், வைரவர், ஐயனார் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். துர்க்கை தெற்கு நோக்கியும், வைரவரும் சூரியனும் மேற்குநோக்கியும் தனித்தனி சந்நதிகளில் வீற்றிருக்க ஐயனார் மட்டும் ஒரு மாடத்தில் இருபெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார். இந்த இடத்தைப் பஞ்ச சந்தி (ஐந்து சக்திகளும் சந்திக்குமிடம்) என்பர். காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலயத்தில் இந்த ஐந்து சந்நதிகளும் ஒரே முற்றத்தில் உள்ளன. இங்குள்ள விநாயகர் பஞ்ச சந்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஐவரும் ஐஸ்வர்யங்களின் வடிவமாகத் திகழ்கின்றனர்.

சங்குபாணிப் பிள்ளையார் விகட சக்கர விநாயகர்

சங்கும் சக்கரமும் திருமாலுக்குரிய ஆயுதங்கள். அவற்றை ஏந்தி நிற்பதால் அவர் சக்கரபாணி எனவும், சங்குபாணி எனவும் அழைக்கப்படுகின்றார். அதுபோல் விநாயகரும் சங்குபாணிப் பிள்ளையார் விகட சக்கர விநாயகர் என்ற பெயர்களில் விளங்குகிறார். மாமனாகிய திருமாலுக்குரிய பெயர்கள்அவருடைய மருகனான விநாயகருக்கு எப்படி வந்தன என்பதைக் காஞ்சிபுரத்தின் தலவரலாறுகள் கூறுகின்றன. முதலில் சக்ரக்கூத்து விநாயகரான விகட சக்கர விநாயகர் வரலாற்றைக் காண்போம்.திருக்கயிலாய மலையில் சிவபெருமானை வழிபடச் செல்லும் பிரம்மா விஷ்ணு முதலான தேவர்கள் தங்கள் ஆயுதங்களை அவரது அரண்மனைக்கு வெளியே வைத்து விட்டுச் செல்வர். அதன்படி ஒரு சமயம் விஷ்ணு தன் சங்கு சக்கரங்களை வைத்து விட்டுச் சென்றார்.

விநாயகர் அங்கு வந்து நின்றார். அவர் அணிந்திருந்த மாலையில் இருந்த வெண்தலை ஒன்று திருமாலின் சக்கரத்தைக் கவ்விக் கொண்டது.திரும்பி வந்த திருமால் சக்கரத்தைக் காணாது திகைத்தார். விநாயகரின் தலை மாலையில் அது சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்தார். விநாயகரிடம் அதைத் தருமாறு கேட்டார். விநாயகர் தருவதாக இல்லை.மாயனான திருமால், அவர் முன்னே வேடிக்கை கூத்தாடினார். அதைக் கண்டு விநாயகரும் எல்லோரும் மகிழ்ந்து வாய் விட்டுச் சிரித்தனர். அந்தச் சக்கரத்தைக் கவ்வியிருந்த வெண் தலையும் சிரித்தது. அதனால் சக்கரம் நழுவியது. திருமால் லாவகமாக அதை எடுத்துக் கொண்டார்.

விகடக் கூத்தால் மகிழ்ந்த விநாயகர் விகட சக்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.காஞ்சிபுரத்தின் தல விநாயகர் இவரே ஆவார். காஞ்சிப் புராணம், கந்த புராணம் முதலியவற்றில் இவர் சிறப்புடன் துதிக்கப்பட்டுள்ளார். ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள கம்பா தீர்த்தம் என்னும் குளத்தின் கரையில் பெரிய மண்டபமும் உள் ராஜகோபுரம் உள்ளன. இந்தக் கோபுர வாயிலில்தான் சிறு சந்நதியில் விகட சக்கர விநாயகர் எழுந்தருளியுள்ளார்.கந்தபுராணத்தின் கடவுள் வாழ்த்தில் இவரைத் துதிக்கும் பாடல் விநாயகர் துதியாக உள்ளது. அந்நூலை அரங்கேற்றும் வேளையில் திகட சக்கரம் என்று தொடங்கும் அப்பாடல் இலக்கணப் பிழை உடையது என்று சிலர் கூறினர். முருகப் பெருமான் புலவனாக சபைக்கு வந்து வீர சோழியம் என்னும் இலக்கண நூலை ஆதாரமாகக் காட்டி அது பிழையற்றது என்று கூறியதாகக் கூறுகின்றனர்.

இனி, சங்குபாணி விநாயகரைக் காணலாம். இவர் வலம்புரிச் சங்கைத் துதிக்கையில் ஏந்தியிருப்பதால், இப்பெயர் பெற்றார். பாலவிநாயகர், ஞானவிநாயகர் முதலிய திருவுருவங்களில் வலம்புரிச் சங்குடன் காட்சியளிக்கிறார் என்பர்.பாரதப் போரை நடத்திய கண்ணன் வலம்புரிச் சங்கை ஏந்தி நிற்பதைத் திருவல்லிக்கேணியில் காணலாம். அவரை சங்கபாணி என்பர். அதுபோல் விநாயகரும் சங்கேந்தி சங்குபாணி விநாயகராகக் காட்சியளிக்கிறார்.சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டு நிதிகள் உள்ளன. கற்பக மரத்தின் கீழ்த்தாமரையில் அமர்ந்து சங்கேந்தி தாமரைச் சங்குபாணியாக விளங்கும் விநாயகர் அன்பர்களுக்கு சங்கநிதியையும் பதும நிதியையும் அருளும் செல்வக் கணபதியாக விளங்குகிறார்.

வயிறுதாரிப் பிள்ளையார்

தமது அழகிய கண்களால் பல தெய்வங்கள் பெயர் பெற்றுள்ளன. திருமாலைச் செந்தாமரைக் கண்ணனாகக் காண்கிறோம். அம்பிகைக்குக் கருந்தடங்கண்ணி, அங்கயற்கண்ணி என்ற பெயர்கள் வழங்குகின்றன. அதுபோல் பிள்ளையாருக்கு மட்டும் அவருடைய பெரிய வயிற்றால் பெயர் வழங்குகிறது. பேழை வயிறன், பெருவயிறன் எனப் பலவாறு அழைக்கின்றனர். அருணகிரி மத்தள வயிறன் உத்தமி புதல்வன் என்பார்.சுந்தரமூர்த்தி நாயனார் அவரை வயிறுதாரி என்றழைக்கிறார். இதற்கு வயிற்றைத் தாங்கி இருப்பவன் என்பது பொருள். காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான ஓணகாந்தன் தளியிலுள்ள விநாயகருக்கு வயிறுதாரிப் பிள்ளையார் என்பது பெயர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்துள் இப்பெயரால் அவரைக் குறித்துள்ளார்.

பொய்த்தேர் விநாயகர்

அழகிய சோலைகள் நிறைந்த காஞ்சியில், கிருஷ்ணன் தெருவில் இந்த விநாயகர் வீற்றிருக்கின்றார். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு இருப்பது போலவும், அந்த இடத்திற்குச் சென்று பார்ப்பதற்கு இல்லாமல் இருக்கும் நிலைக்குப் பேய்த்தேர் என்பது பெயர். இதைக் கானல்நீர் எனவும், பொய்த்தேர் எனவும் அழைப்பர். மணற்பரப்பின் நடுவில் இயற்கையாக அமைந்திருப்பது போலவும், அருகில் சென்றால் காணமுடியாததாகவும் இருந்த விநாயகர் ஆலயம் பொய்த்தேர் விநாயகர் என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் மணற்பரப்பு குறைந்த வீடுகள் வந்துவிட்டன என்றாலும் அவ்விடத்தில் ஒரு விநாயகர் ஆலயத்தை அமைத்துப் பொய்த்தேர் விநாயகர் என அழைத்தனர். இப்போது பெயருக்கேற்ப அழகிய தேர் வடிவில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு விநாயகர் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் கணபதி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchi ,Puram ,Thirugnanasampandar ,Shiva ,Tirumal ,Murugan ,Kotavai ,Kali ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...