×

ராணுவம், கடற்படையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடலோர காவல் படையில் ஆணாதிக்க மனப்பான்மை ஏன்?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

புதுடெல்லி: ராணுவம், கடற்படையில் நிரந்தர கமிஷன் பிரிவில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடலோர காவல் படையில் ஆணாதிக்க மனப்பான்மை ஏன்? என்று ஒன்றிய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு படையில், ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் எனப்படும். அதன்படி பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.

இதன் கீழ் பணியில் சேரும் ஆண் அதிகாரிகள், பணிக்காலம் முடிந்ததும் நிரந்தர கமிஷனை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வு பெறலாம். ஆனால், குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியில் சேரும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர கமிஷனில் இணைய வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், நிரந்தர கமிஷன் முறை பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நடைமுறை, ராணுவம் மற்றும் கடற்படையில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. கடலோர காவல்படையில் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கடலோர காவல்படையில் குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் பணியாற்றி வரும் பெண் அதிகாரி பிரியங்கா தியாகி, நிரந்தர கமிஷன் முறையை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘ராணுவமும் கடற்படையும் ஏற்கனவே இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தியிருக்கும் போது, கடலோர காவல்படை மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை? பெண்கள், எல்லைகளை பாதுகாக்க முடியும் என்றால், அவர்களால் கடற்கரையையும் பாதுகாக்க முடியும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஒன்றிய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. அதை இங்கும் காட்ட வேண்டும்.

கடலோரக் காவல் படையில் பெண்களைப் பார்க்க விரும்பாத நீங்கள், ஏன் இவ்வளவு ஆணாதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள்? கடலோர காவல்படை மீது உங்களுக்கு ஏன் இந்த அலட்சிய மனப்பான்மை. எனவே கடலோர காவல் படையில் பெண்கள் இருக்க முடியாது என்று சொல்லப்பட்ட காலம் போய்விட்டது. பெண்களால் எல்லைகளைக் காக்க முடிந்தால், பெண்களால் கடற்கரையையும் பாதுகாக்க முடியும்’ என்று உத்தரவிட்டது.

The post ராணுவம், கடற்படையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடலோர காவல் படையில் ஆணாதிக்க மனப்பான்மை ஏன்?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,EU ,NEW DELHI ,Supreme Court of the Union ,Defence Force of ,Indian Army ,Sharamarari ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு