×

அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது நின்று ஜெயித்து காட்டட்டும் திருவண்ணாமலையில் துரை வைகோ சவால் பாஜக வளர்ந்துவிட்டது என சொல்லும்

 

திருவண்ணாமலை, பிப்.18: பாஜக வளர்ந்துவிட்டது என சொல்லும் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலாவது நின்று ஜெயித்து காட்டட்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ தெரிவித்தார். திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தில், வேலூர் மண்டல மதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து, மதிமுக முதன்மை செயலாளர் துரை ைவகோ அளித்த பேட்டி: விவசாயிகள் ஏற்கனவே நடத்திய போராட்டத்தின்போது, பாஜக அரசு கொடுத்த குறைந்தபட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் விவசாயிகள் போராடுகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை வீசுவது போன்ற செயல்களை நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. வரும் தேர்தலில் நாடு முழுவதும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் பாஜவுக்கு பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகா வஞ்சிக்கிறது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழ்நாடு அரசு கண்டித்திருக்கிறது. கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சி நடைபெறாது. சமீபகாலம் வரை பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்துள்ளது. பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களை அதிமுக ஆதரித்திருக்கிறது. இப்போது திடீரென பாஜகவை எதிர்ப்பது, தேர்தல் ஸ்டண்ட் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது. அவரது செயல்பாடுகள் அவரது கட்சியையும் பாதிக்கும். அரசியல்வாதிகள் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை பேச வேண்டும். சாதி, மதம் சார்ந்த அரசியல் பேசக்கூடாது. பாஜக வளர்ந்துவிட்டது என சொல்லும் அண்ணாமலை, இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது அவர் நின்று ஜெயித்து காட்டட்டும் பார்க்கலாம். மதவாத பாஜகவுக்கு என்ன ஆதரவு இருக்கிறது என்று இந்த தேர்தலில் தெரிந்துவிடும். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை. காஸ் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. எரிபொருட்களின் விலையேற்றத்தால், மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.

திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் ஒரு ேலாக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசாபா சீட்டும் பெற்றோம். இப்போது, லோக்சபாவில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. கவுரமாக நடத்துகின்றனர். எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும். எனவே, இயக்கத்தின் தலைமை முடிவு செய்யும். கூட்டணி கட்சிகள் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றனர். கடந்த தேர்தலில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை. எனவே, புதிய சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடம் சேர்க்க முடியாது என்பதால் திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை கூட்டணி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னும் கொள்கைகளை சொல்லவில்ைல. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரும் உரிமை உள்ளது. நடிப்புதுறையில் உழைப்பால் உயர்ந்தவர். எனவே, எந்த பின்னணியில் அரசியலுக்கு வந்தார் என இப்போது யூகத்தின் அடிப்படையில் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், தணிக்கை குழு உறுப்பினர் பாசறைபாபு, மாவட்ட செயலாளர் சீனிகார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது நின்று ஜெயித்து காட்டட்டும் திருவண்ணாமலையில் துரை வைகோ சவால் பாஜக வளர்ந்துவிட்டது என சொல்லும் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Durai Vaiko ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Tamil Nadu ,MDMK ,general secretary ,Madhyamuk ,Periya Street, Tiruvannamalai ,Vellore Mandal Madhyamik ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...