×

திரிமூர்த்தி

சிவாலயங்கள் தோறும் கருவறையில் பிரதிட்டை செய்யப் பெற்று காணப்பெறுவது சிவலிங்கத் திருமேனிகள்தாம். வட்டம் அல்லது சதுரபீடத்தின் மேல் பாணத்துடன் திகழும் சிவலிங்க வடிவத்தினைப் பொதுவாக சிவமூர்த்தமாக மட்டுமே நாம் கருதுகிறோம். ஆனால், அது சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவம் என்பதை சிவாகமங்கள் உணர்த்துகின்றன.

பீடத்தின்மேல் வட்ட வடிவத் தூணாகத் திகழும் பாணத்தின் முழு வடிவத்தைக் காணும்போது, அடிப்பகுதி சதுரமாகவும், நடுப்பகுதி எண் பட்டை வடிவிலும், மேற்பகுதி மட்டும் வட்டமாகவும் காட்சி தரும். சதுரப் பகுதியை பிரம்மன் வடிவம் என்றும், எண்பட்டை பகுதியை விஷ்ணு பாகமாகவும், வட்டப் பகுதியை ருத்திர பாகமாகவும், சிற்பாகம நூல்கள் குறிக்கின்றன. எனவே, ஒரு சிவலிங்கத்தை நாம் பூசனை செய்யும்போது எந்தவித பேதமுமின்றி மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்கின்றோம்.

மகுடாகம நெறிப்படி அமையப் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கப் பெருமான் வடிவம், பிரம்மாண்டமானதாகும். அந்த லிங்கத்தின் பாணமும் சதுரம், எண்பட்டை, விருத்தம் (வட்டம்) என்ற அமைப்பிலே திகழ்கின்றது. சிவபாகமாகத் திகழும் பாணத்திற்கு பண்டு மகுடாகம நெறிப்படி வழிபாடு செய்யும்போது அதனை கீழிருந்து மேலாக பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரசிவம் என ஒன்பது பகுதிகளாக வகுத்து வழிபாடு மேற்கொண்டனர். சிவஞான சித்தியார் இதனை நவந்தருபேதம் எனக் குறிக்கும்.

விரிஞ்சிபுரம் சிவாலயத்திலுள்ள ஒரு சுவர் ஓவியக் காட்சியில், சிவலிங்க உருவம் எவ்வாறு போற்றப் பெறுகின்றது என்பது விளக்கப் பெற்றுள்ளது. தாருகா வனத்து ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் நின்றவாறு சிவலிங்க வழிபாடு செய்கின்றனர். அக்காட்சியில் நடுவே சிவலிங்கமும், இருபுறமும் ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் வணங்கி நிற்கின்றனர்.

சிவலிங்கத்தின் அடிப்பகுதியில், நான்முகனாகிய பிரம்மனின் வடிவமும், அதற்கு மேலாக சங்கு சக்கரம் ஏந்திய திருமாலின் உருவமும், அதற்கு மேலாக லிங்க பாணமும் உள்ளன. சிவலிங்க உருவத்தில், மும்மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளனர் என்பதை, இவ்வோவியம் சிறப்புற எடுத்துக்காட்டுகின்றது. தஞ்சைப் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீச்சரம் போன்ற கோயில்களில், ஓர் உருவமாக அரிஅரன் திருமேனிகள் காணப் பெறுகின்றன.

அவற்றில் ஒருபாதி சிவனுருவமாகவும், மறுபாதி விஷ்ணு உருவமாகவும் இணைந்து காணப்பெறும். சமபங்க நிலையில் நான்கு திருக்கரங்களுடன் திகழும் இவ் வடிவத்தின் வலமேற்கரத்தில் சிவனார்க்குரிய மழுவும், இடமேற் கரத்தில் திருமாலுக்குரிய சங்கும் இடம்பெற்றுள்ளன. வலமுன் கரத்தால் அபயம் காட்ட இடமுன் கரத்தை தொடைமேல் இறுத்தியவாறு அரிஅரன் திகழ்வார். திருமாலின் பாகமான இடப்பாகத்தில் கணுக்கால்வரை துகூலம் எனும் நீண்ட ஆடையும் சிவனார்க்குரிய வலப்பாகத்தில் தொடைவரை திகழும் தோலாடையும்
காணப்பெறுகின்றது.

சிவனும், திருமாலும் எவ்வாறு ஓர் உருவமாகக் காணப் பெறுகின்றாரோ, அதேபோன்று சிவன், மால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் திகழும் அரிய திருமேனிகள் சில ஆலயங்களில் இடம்பெற்றுள்ளன. ஆதிபுரி எனப்பெறும் திருவொற்றியூர் சிவாலயத்தில் மகிழ மரத்திற்கு நேர் எதிராக அமைந்துள்ள கோஷ்டம் ஒன்றில் மும்மூர்த்திகளும் இணைந்துள்ள அழகிய கோலக்காட்சியைக் காணலாம். ஒரு பாதத்தின் மேல் நின்றவாறு மான் மழு ஏந்திய சிவனார் நிற்க அவர்தம் இடுப்புப் பகுதியில் வலப்புறம் ஒரு காலுடன் நான்
முகன் வணங்கும் கோலத்திலும், இடப்புறம் அதேபோன்று ஒரு காலுடன் சங்கு சக்கரம் ஏந்தி வணங்கும் கோலத்துடன் திருமாலும் காணப்பெறுகின்றார்.

இங்கு இடுப்புப் பகுதியில் மூன்று தெய்வங்களின் உருவங்களும் ஒன்றிணைந்துள்ளன. இம்மூர்த்தியை திரிபாத திரிமூர்த்தி என சிற்ப ஆகம நூல்கள் குறிக்கும். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் சிவ விஷ்ணு ஆலயங்கள் இணைந்த ஒரு திருக்கோயிலாகும். விமானத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில் சிவனுக்காக எடுக்கப் பெற்றதாகும். இதனை அங்குள்ள கல்வெட்டு சத்திரிய சிம்ம பல்லவேச்வர கிருஹம் எனக் குறிக்கின்றது. விமானத்துடன் மேற்கு நோக்கி அமைந்த கோயிலும் சிவனார்க்காக எடுக்கப் பெற்றதாகும். இதனை அங்குள்ள கல்வெட்டு இராஜசிம்ம பல்லவேச்வர கிருஹம் எனக் குறிக்கின்றது. இவ்விரண்டு ஆலயங்களிலும் சுவரில் சோமாஸ்கந்தருடன் திருமாலும், பிரம்மனும் திகழ்வர். அவைகளுக்கு முன்பாக லிங்கம் இடம் பெற்றிருக்கும்.

இரண்டு சிவாலயங்களுக்கும் இடையில் நீள் சதுர வடிவில் அமைந்துள்ள கருவறையில் திருமால் சயனக் கோலத்தில் காணப்பெறுவார். இவ்வாலயத்தை நரபதி சிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம் என அங்குள்ள கல்வெட்டு குறிக்கின்றது. அதே கோயிலை குறிக்கும் ராஜராஜ சோழனின் கல்வெட்டு, இக்கோயிலினை பள்ளிக்கொண்டருளிய தேவர் கோயில் எனக் குறிப்பிடுகின்றது. அதே கல்வெட்டு இம்மூன்று கோயில்களும் சேர்ந்த தொகுதியை ‘ஜலசயனம்’ என்று குறிக்கின்றது.

இக்கடற்கரைக் கோயிலின் மேற்கு நோக்கிய தலைவாயில் நிலையில் ஓர் அரிய சிற்பம் இடம்பெற்று சிதைந்த நிலையில் காணப் பெறுகின்றது. அதில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் இணைந்த ஓர் உருவாய் நின்ற கோலத்தில் திகழும் ஏகபாத மூர்த்தியின் வடிவம் காணப் பெறுகின்றது. இங்கு நடுவில் திகழும் மூர்த்திக்கு மட்டுமே ஒரு பாதம் காட்டப்பெற்றுள்ளது. மற்ற இரு தெய்வங்களும் இடுப்புப் பகுதியில் கால்கள் இன்றி இணைந்துள்ளன. ஆறு கரங்கள் காணப்பெறுகின்றன. பெருமான் சூலம், பாம்பு ஆகியவற்றைத் தாங்கியுள்ளார்.

மாமல்லையில் காணப்பெறும் ஏகபாத திரிமூர்த்திக்கும், திருவொற்றியூரில் காணப்பெறும் திரிபாத திரிமூர்த்திக்கும் சிறிய வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. இரண்டு இடங்களிலும் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூன்று தெய்வங்கள் காணப்பெறினும், திருவொற்றியூரில் மூன்று பாதங்களையும், மாமல்லையில் ஒரே பாதத்தினையும் நாம் தரிசிக்கின்றோம். சிவலிங்கம் போன்று இவையும் முத்தெய்வங்களும் ஒன்றே என்பதைச் சுட்டுவனவாகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post திரிமூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Trimurti ,Shivalayam ,Shivalinga ,Shivamurtha ,Shiva ,Vishnu ,Brahman ,
× RELATED அமிர்தகடேஸ்வரர் ஆலயம், மேலக்கடம்பூர்