×

சூலூர் செல்போன் கடையில் 200 செல்போன்கள் கொள்ளை

 

சூலூர், பிப்.13: சூலூர் அருகே அரசூர் ஊராட்சியில் தென்னம்பாளையம் பிரிவு பகுதி அமைந்துள்ளது. இங்கு அதே ஊரை சேர்ந்த கந்தசாமி என்பவர் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் செல்போன்கள் விற்பனையுடன் மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களையும் மொத்தமாக மற்றும் தவணை முறையிலும் விற்பனை செய்து வருகிறார். கடையின் மேற்கூரை இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு கந்தசாமி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் அவரது கடைக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் இணைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்த செல்போன்களை மட்டும் ஒரு சாக்கு பையில் போட்டு கொள்ளை அடித்து சென்றனர். கடையின் மேற்கூரையில் அமைக்கப்பட்டு இருந்த காற்றாடியை கழட்டி விட்டு அதன் வழியாக கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.

மேலும், கடையில் கொள்ளையர்கள் நுழைந்த போது கந்தசாமியின் செல்போனுக்கு ஆலாரம் வந்துள்ளது. தூக்க கலக்கத்தில் அவர் அதை கவனிக்காமல் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது கடைக்குள் இருந்த அனைத்து செல்போன்களும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த கந்தசாமி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கடையில் வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணாமல் போய் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கந்தசாமி அவற்றின் மொத்த மதிப்பை கணக்கிட்டு கூறுவதாக தெரிவித்துள்ளார். சூலூரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் கடையை உடைத்து செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சூலூர் செல்போன் கடையில் 200 செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sulur ,Thennampalayam ,Arasur panchayat ,Kandasamy ,Dinakaran ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது