×

‘இன்ஸ்டன்ட்’ உணவு முறையால் ‘இம்சை’ அனைத்து நேரத்திலும் உண்பதற்கு உகந்தது ‘இட்லி’: மருத்துவர்கள் ‘அட்வைஸ்’

ஆண்டிபட்டி: ரோட்டோரத்து பாட்டிகளின் இட்லிக்கடைகள் அழிந்துள்ள நிலையில், எங்கு நோக்கினாலும் வடமாநிலத்து உணவுகளே விற்பனை காண்கிறது. பழமைக்குரிய இட்லி உள்ளிட்ட உணவுகள் மீட்டெடுக்கப்படுவது அவசியம். இன்றைய நவீன வாழ்வில் பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆடை அணிகலனில் இருந்து, உணவு பழக்கம் வரை மாறி விட்டன. சில உணவுகள் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதே இல்லை. ஆனாலும் கூட பல நூற்றாண்டாக இருந்து வரும் ஒரு உணவாக ‘இட்லி’ இருக்கிறது. இன்றுவரை அனைவரின் விருப்ப உணவுப் பட்டியலிலும் இது இடம் பிடித்திருக்கிறது. துரித உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்ற ‘இன்ஸ்டன்ட்’ உணவு முறையால் சர்க்கரை, ஊட்டச்சத்துக் குறையாடு போன்ற நோய் பாதிப்புகள் தற்போது மக்களை அதிகம் தாக்குகிறது. இந்த நோய் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் பாரம்பரிய உணவு முறைகள் மறந்து போனதால் தான் எனத்தெரிய வந்துள்ளது. தற்போது குழந்தைகளிடம் உடல் பருமன், சர்க்கரை டைப் 1 போன்ற பாதிப்புகள் அதிகளவு காணப்படுகின்றன. வளரிளம் பெண்கள். கர்ப்பிணிகள் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரும்புச்சத்து குறைபாடு என்பது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை, செயல்பாடுகளை பாதித்து ரத்தச்சோகை ஏற்பட செய்கிறது.

இதனால் உடல் வெளுத்தல், சோர்வு, பசியின்மை, மயக்கம், படபடப்பு, மூச்சுவாங்குதல், முடி கொட்டுதல், சரும வறட்சி போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. பீட்ஸா, பர்க்கர் உள்ளிட்ட உணவுகளின் வருகை அதிகரிப்பில், தெருமுனை பாட்டி கடைகளில் விற்ற இட்லி இன்றைக்கு குறைந்து வருகிறது. 20 ரூபாய்க்குள் 2 வகை சட்னியோடு, சாம்பாரும் சேர்த்து, வயிற்றுக்கு இட்லி சாப்பிட்டு தூங்கலாம்.அரிசியிலான இட்லி குழந்தை முதல், முதியோர் வரை விரும்பி உண்பதாக இருக்கிறது. மிகப்பிரபல உணவு பட்டியலில் இருப்பினும், கடந்த காலத்தை ஒப்பிடும்போது இதன் விற்பனை சரிந்திருக்கிறது. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு ஆவியில் வேக வைப்பதால் உடலுக்கு நலம் சேர்க்கிறது. இட்லி பல நூறாண்டுகளாக நம்மூர்களில் அறியப்பட்டு வந்த ஓர் உணவாகும். இட்லியுடன் சேர்க்கும் உளுந்தின் தாயகம் இந்தியாதான். குறிப்பாக தமிழகத்தில் இந்த உளுந்து விளைச்சல் அதிகமிருக்கிறது. சங்க இலக்கியங்களிலும் இந்த உளுந்து பற்றிய குறிப்புகள் இருக்கிறது. இட்லியை கண்டறிந்தது தமிழர்களாகவே இருப்பர் என்பதற்கான ஆதாரங்களை பழமை இலக்கியங்கள் காட்டி நிற்கிறது. ஆவியில் இட்டு அவிக்கும் பண்டமான கொழுக்கட்டையின் தொடர்ச்சியாகவே இந்த இட்லியும் தமிழர்கள் வழியேதான் கண்டறியப்பட்டிருக்கிறது.

7ம் நூற்றாண்டில் இட்லியை ’இட்டரிக’ என்றழைத்தனர். 12ஆம் நூற்றாண்டில் ‘இட்டு அவி’ எனவும், பின் அது மருவி ‘இட்டலி’ யாகி, ‘இட்லி’ உருவானதெனவும் கூறப்படுகிறது. செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி துவங்கி நடிகை பெயரிலான இட்லி வரையிலும் இட்லிகள் ரகம் ரகமாக விற்பனை செய்யப்படுகின்றன.இட்லி தயாரிப்பிற்கான அடிப்படை செயல்முறை ஒன்றுதான், பொருட்கள் சேர்மானமே வித்தியாசப்படுகிறது. பல்வேறு ரகங்களில் இட்லிகள் உள்ளது.

* பார்க்கும் இடமெல்லாம் பானிபூரி கடைகள்

பழமை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஒரு காலத்தில் தெருக்கள்தோறும் இட்லிக்கடைகள் இருந்தன. இப்போது உடல்நலம் கெடுக்கும் உணவுக்கடைகளாக பானிபூரி கடைகள் உள்ளிட்டவைகளையே பார்க்க முடிகிறது. தூங்கா நகரின் அடையாளப் பெருமைக்குரியதான இட்லி மீட்டெடுக்கப்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் ‘இட்லி தினம்’ கொண்டாடி, இந்த நம் பழமை உணவின் மகத்துவத்தை அறியச் செய்வது அவசியம். சமூக ஆர்வலர்கள், அமைப்பினரும் இந்த இட்லிக்கான பெருமை காக்கும் பிரசாரங்களை, நிகழ்வுகளை நடத்த வேண்டும்’’ என்றார்.

* உடலுக்கான சக்தி கிடைக்கிறது

டாக்டர்கள் கூறும்போது, ‘‘உணவில் காலை, இரவு என அனைத்து நேரத்திலும் உண்பதற்கு உகந்த உணவாக இட்லி இருக்கிறது. சிறந்த மருத்துவ குணம் கொண்டிருக்கிறது. இட்லியின் அடிப்படைப் பொருட்களான அரிசி, உளுத்தம் பருப்பில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புகள் நோய் நச்சு முறிவு மருந்தாக உடலில் செயலாற்றுகின்றன. மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டிருப்பதும் இதன் சிறப்பாகும். இட்லி சாப்பிடுவதால் அமினோ அமிலங்கள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபாட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும், உடலுக்கான சக்தியும் கிடைக்கிறது’’ என்றனர்

The post ‘இன்ஸ்டன்ட்’ உணவு முறையால் ‘இம்சை’ அனைத்து நேரத்திலும் உண்பதற்கு உகந்தது ‘இட்லி’: மருத்துவர்கள் ‘அட்வைஸ்’ appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Rotorua ,North State ,Imsa ,Imsai ,Dinakaran ,
× RELATED டூர் போக பிளான் போடுறீங்களா… இத மிஸ்...