×

தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. ராமானுஜருக்கு மிக பிரியமான மாதம் இந்த தை மாதம் என்று கூட நாம் சொல்லலாம். சுவாமி ராமானுஜரை கொண்டாடிய, சுவாமி ராமானுஜரே கொண்டாடிய எம்பார் இப்பூவுலகில் திருஅவதாரம் செய்த நன்னாள் தை புனர்பூச நன்னாளில், சுவாமி ராமானுஜரின் அர்ச்சா திருமேனி ஸ்ரீ பெரும்புதூரில், (சுவாமி ராமானுஜர் ரங்கத்தில் இருந்த போதே) பிரதிஷ்டை செய்யப்பட்டது தை பூச நன்னாளில், குரு புஷ்யம் என்றே இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

திருமழிசை பிரான் என்று கொண்டாடப்படும் திருமழிசை ஆழ்வார் இந்த ஜகத்தில் திருவதாரம் செய்தது தைமகத்தில்தான். சுவாமி ராமானுஜருக்கு பிரியமான கூரத்தாழ்வான் அவதரித்ததும் இந்த தை மாத அஸ்த நட்சத்திரத்தில் தான். இதில் தை பூசமும் தை புனர்பூசமும் சுவாமி ராமானுஜரோடு பெரிதும் சம்பந்தப்பட்ட, ராமானுஜரின் சம்பந்தம் பெற்ற நாட்கள்.

தை பூசம்

120 வருடங்கள் இப்பூவுலகில் வாழ்ந்து நாமெல்லாம் உய்ய வழி காட்டிய உடையவரான சுவாமி ராமானுஜர், இப்பூவுலகை விட்டு செல்லும் நேரம் வந்த போது, அவரிடம் கந்தாடை ஆண்டான் என்ற சீடர் சுவாமி ராமானுஜரிடம் அவருடைய திவ்ய அர்ச்சா விக்கிரக மூர்த்தியை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும்படி செய்ய வேண்டும் என வேண்டி நிற்க, அதன்படி சுவாமி ராமானுஜர் தம் திவ்ய திருமேனியை போன்றே ஒரு அர்ச்சா ரூபத்தை ஒரு சிற்பியை கொண்டு வடிவமைக்க செய்து, அந்த அர்ச்சா விக்கிரக ரூபத்தை அப்படியே ஆலிங்கனம் செய்துகொண்டார்.

அப்படி ஆலிங்கனம் செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல் தம்முடைய முழு சக்தியையும் அந்த அர்ச்சா விக்கிரக திருமேனியிடம் கொடுத்தும்விட்டார். அப்படி தம் சக்தியை அந்த விக்கிரகத்திற்கு அளித்துவிட்டு, கந்தாடை ஆண்டானை அன்போடு அழைத்து அந்த அர்ச்சா விக்கிரகத்தை உடனடியாக ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூருக்கு கொண்டு செல்லும் படி பணித்து அந்த அர்ச்சா விக்கிரக ரூபத்தை குரு புஷ்யம் அதாவது தைபூசதிருநாள் அன்று பிரதிஷ்டை செய்யும்படி அவரே தம் திருவாயால் பணித்தார்.

சுவாமி ராமானுஜரின் ஆணைக்கேற்ப கந்தாடை ஆண்டானும் உடையவரின் அர்ச்சா விக்கிரக ரூபத்தை ஸ்ரீ பெரும்புதூருக்கு சர்வ மரியாதையோடு கொண்டு வந்து அந்த அர்ச்சா விக்கிரகத்தை ஸ்ரீ பெரும்புதூரிலேயே பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை சிரத்தையாக செய்து கொண்டிருக்க, ஒரு நாள், ஸ்ரீரங்கத்தில் தம் சீடர்கள் புடைசூழ இருந்த ராமானுஜரின் திருமேனியில் திடீரென ஒரு தளர்வு ஏற்பட்டதாம்.

உடனே அவர், தம் அருகில் இருந்த சிஷ்யர்களிடம், “இன்று குரு புஷ்யமோ?” என்று கேட்க சீடர்களும், “ஆம் சுவாமி” என்று கூற அதற்கு ராமானுஜரோ, “கந்தாடை ஆண்டான், நம் திருமேனியை பிரதிஷ்டை செய்துகொண்டிருப்பான். அதனால், நம் சக்தி குறைந்தது போலும்” என்றாராம். அப்படிப்பட்ட ஒரு அர்ச்சா திருமேனியை அல்லவா நாம் இன்றளவும் ஸ்ரீ பெரும்புதூரில் தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம்? அந்த உயரிய அர்ச்சா மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் என்பதாலேயே குரு புஷ்யம் எனப்படும் தை பூசம் சுவாமி ராமானுஜரின் அனைத்து அடியவர்களாலும் இன்றளவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

தை புனர்பூசம்

சுவாமி ராமானுஜரின் திருவடி நிழலாகவே வாழ்ந்த எம்பார் அவதரித்தது தை மாதம் புனர்பூசம் நட்சத்திரம் கூடிய தினத்தில்தான். ராமானுஜரின் சித்தி மகன் என்ற பெருமை ஒருபுறம் என்றால், ராமானுஜரின் உயிரைக் காத்தவர் என்ற தனிபெரும் பெருமை எம்பாருக்கு உண்டு.

யாதவ பிரகாசர் என்பவரிடம் இவ்விருவருமே பாடங்கள் கற்றுக்கொண்டிருந்த போது, ராமானுஜரின் அதீத அறிவை பொறுத்துக்கொள்ள முடியாத யாதவப்ரகாசர், எப்படியாவது ராமானுஜரை கொன்று விட வேண்டும் என்று திட்டமிட்டு தம் சிஷ்யர்களோடு விந்திய மலை நோக்கிச் செல்ல, யாதவ பிரகாசரின் திட்டத்தை எப்படியோ அறிந்துகொண்டு ராமானுஜரை அந்த இடத்தை விட்டே தப்பித்து போகும்படி செய்தது எம்பார் தான். ராமானுஜரின் தனியான, தணியாத அன்பிற்கு பாத்திரமான எம்பார் அவதரித்த நாள் தை புனர்பூசம் என்பதாலேயே, இந்நாளை எம்பார் அவதரித்த மதுரமங்கலத்தில் விமர்சையாக கொண்டாடுவார்கள்.

சுவாமி ராமானுஜரின் அர்ச்சா விக்கிரக தினமான தைபூச நன்னாளையும், அந்த உடையவரின் திருவடி நிழலான எம்பார் அவதரித்த தை புனர்பூச தினத்தையும் ஸ்ரீமதே ராமானுஜாய நம: என்று ஜபித்த படியே நாமும் உளமார கொண்டாடுவோம்.

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

The post தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும் appeared first on Dinakaran.

Tags : Tai ,Ukum Tai ,Punarphoosam ,Taiphoosam ,Ramanuja ,Embar ,Swami Ramanuja ,
× RELATED தர்பூசணி உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள்