×

துலாம் ராசி ஆண் இனியவன், ரசிகன்…

துலாம் ராசி ஆண்கள், சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், பார்க்கவும் பேசவும் கவர்ச்சியாக, அட்டகாசமாக இருப்பார்கள். இனிமையான நயமான சொற்களைப் பேசுவார்கள். கோபமாக வெறுப்பாக பேசுவதில்லை. இவர்களைச் சுற்றி அறுபது வயதிலும் பெண்கள் கூட்டம் காணப்படும். எல்லா இடத்திலும் இளைஞராகவே திகழ்வார்கள். உண்மை வயதைவிட பத்திருபது வயது, குறைவாகவே தோன்றுவார்கள். இவர்கள் பேச்சிலும் நடத்தையிலும் புத்திசாலித்தனமாக, குறும்புத்தனமும் நிறைந்து இருக்கும்.

மாயவித்தை தெரிந்தவர்கள்

துலாம் ராசி ஆண்கள், மாயக் கண்ணனைப் போன்றவர்கள். மாயக் கண்ணனின் லீலைகளை இவர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அவனுடைய விளையாட்டுகளை குறும்புத்தனங்களை கண்டிக்கவும் முடியாது. அதற்காக அவனைக் கொஞ்சவும் முடியாது. இப்படிப்பட்ட சில செயல்களில், துலாம் ராசி ஆண்கள் ஈடுபடுவர். இவர்கள் கிரிமினல்கள் கிடையாது. விளையாட்டுப் பிள்ளைகள்.

அசுரகுருவின் ஆதிக்கம்

துலாம் ராசியினர், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் என்பதால், (எப்போதும் அல்ல சில சமயங்களில்) என்ன செய்தாவது வெற்றியை அடைய வேண்டும், நினைத்ததைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சில தகிடு தத்தங்களும், சில சில்மிஷங்களும் செய்வார்கள். இவர்களோடு இருக்கும் அனைவரும் இவர்களை பார்த்து ரசித்து சந்தோஷமாக இருப்பார்கள். சுக்கிரன் அசுரகுரு அல்லவா! சில அசுரத் தனங்களும் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும். சிலர் பிளே பாயாக இருப்பர். சில காலம் வரை நேற்றோரு மேனகை, இன்றொரு ஊர்வசி என்று இருப்பார்கள். பின்பு நல்ல கணவராக மாறிவிடுவர்.

நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்

துலாம் ராசி ஆண்கள், தனிமையில் இருக்க விரும்புவது கிடையாது. எப்போதும் நண்பர்கள், உறவினர்கள் குறிப்பாக பெண்கள் சுற்றம் சூழ இருப்பார்கள். கல்யாணம், கருமாதி என்று எந்த நிகழ்வாக இருந்தாலும், அங்கு இவர்களின் பங்கு செயல்பாடு குறிப்பிட்டுப் பாராட்டும்படி இருக்கும். சமையல் கட்டில் இருந்து வரவேற்பு பதாகை வைத்து பேனர் கட்டுவது வரை எல்லாவற்றிற்கும் யோசனை சொல்வார்கள். அந்த யோசனைகள் சிறப்பாக இருக்கும். சில சமயம், இவர்களே இறங்கி அந்த வேலைகளை அழகாகச் செய்வார்கள்.

அன்பின் திருவுருவம்

துலாம் ராசி ஆண்களின் ஆத்மா, அன்புக்கு ஏங்கும். அன்பை விரும்பும். அன்பை வழங்கும். அன்பைப் பரப்பும். இந்த அன்புக்கு, “காதல்’’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், இவர்கள் வயதான முதியவரிடமும் மிகுந்த அன்போடும், பரிவோடும் நடந்து கொள்வார்கள். சிறு குழந்தையிடமும் பாசத்தோடும் நேசத்தோடும் நடந்து கொள்வார்கள். “அன்பு’’ என்ற சொல்லுக்கு இருக்கக் கூடிய அத்தனை பரிமாணங்களும் துலாம் ராசி ஆண்களிடம் இருக்கும்.

பெண்ணின் இலக்கணம்

துலாம் ராசி ஆணுக்கு, நளினமாக இருக்கும் பெண்களைத் தான் பிடிக்கும். வாயாடியாகவோ, ஆண்களைப் போல பைக் ஓட்ட வேண்டும், ஏரோபிளேன் ஓட்ட வேண்டும் என்று பேசும் பெண்களை இவர் விரும்பமாட்டார் அல்லது ஒரு சவாலாக எடுத்து காதலித்துத் திருமணம் செய்து, பெட்டிப் பாம்பாக அடக்கிவிடுவார். லட்சியப் பெண் என்று இவர் நினைப்பது, பாரதிதாசன் காட்டிய குடும்ப விளக்காக இருக்க வேண்டும். அதே சமயத்தில், அந்தப் பெண் நல்ல நுண்ணறிவும், நகைச்சுவை உணர்வும் கொண்டவளாக இருக்க வேண்டும். இவருடைய குறிப்புகளைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அதிகாரம் கூடாது

துலாம் ராசி ஆணிடம், அவர் மனைவி தனக்கு சுகம் இல்லை என்றோ அல்லது தன்னால் இந்த வேலை செய்ய முடியாது, நீ.. செய்து கொடு என்றோ இவரை வேலை வாங்க வேண்டும் என்றோ, அதிகாரம் செய்யக் கூடாது. அது ஒருபோதும் நடக்காது. ஆணை அதிகாரம் செய்யும் பெண்ணை இவர் அடியோடு வெறுப்பார். அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் தன்னைத் தன் போக்கில் விட்டுவிட வேண்டும். தன்னை எவரும் கட்டுப் படுத்தவோ தனது கடமைகளைச் சுட்டிக்காட்டவோ கூடாது. எனவே துலாம் ராசி ஆண்களை மனைவிமார் எவரும் அதிகாரம் செய்யக் கூடாது. அவர் தனக்கு உதவியாக இருப்பார். தன்னுடைய வேலை களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பதும் கூடாது.

பொருத்தமான வேலை

துலாம் ராசி ஆண்கள், பொதுமக்களோடு கலந்து உறவாடுகின்ற வேளைகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். பிஆர்ஓ, நுகர்வோர் சேவை மையப் பணியாளர் அல்லது அதிகாரி, விற்பனை மேலாளர், விற்பனைப் பணியாளர் என மக்களோடு தினமும் 10,100 பேரோடு பேசுகின்ற வேலையைச் செய்வர். பலரிடம் பேசி காரியம் சாதிக்கின்ற வேலையில் வெற்றிகரமாக ஈடுபடுவர். இவர்கள் கவுன்சிலிங், மத்யஸ்தம், சமாதான முயற்சிகள், மீடியேஷன் போன்ற துறைகளில் ஜொலிப்பார்கள். சுற்றுலாத்துறை, திரைப்பட விமர்சனம், சுற்றுலா ஏஜென்ட்கள் போன்ற வேலைகள் இவர்களுக்கு ஏற்றவையாகும். மல்டி டாஸ்கிங், டார்கெட், போன்ற சொற்கள் இவருக்கு கசக்கும். இவர் போக்குக்கு இவரை வேலை செய்யவிட வேண்டும். இந்த நான்கு வேலைகளையும் இந்த நாளுக்குள் முடித்து வைக்க வேண்டும் என்று ஒரு டெட்லைன் குறித்துக் கொடுத்தால், அவர் எந்த வேலையையும் செய்ய மாட்டார். அவருக்கு வேலை செய்ய வேண்டும் என்ற மன அழுத்தம் (ஸ்ட்ரஸ்) இருக்கக் கூடாது. யாரும் இவரைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

ஆடல் பாடல் கொண்டாட்டம்

துலாம் ராசி ஆண்கள், பாட்டு கேட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு செய்யும் வேலைகளை மிகவும் விரும்புவர். கேளிக்கைகளில் அதிக விருப்பம் உடையவர்கள். எப்போதும் இவரைச் சுற்றி பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும். அல்லது ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்டால் மியூசிக் இசைத்துக் கொண்டிருக்கும்.

 

The post துலாம் ராசி ஆண் இனியவன், ரசிகன்… appeared first on Dinakaran.

Tags : Venus ,
× RELATED துலாம் பெண்களின் வெற்றி ரகசியம்