×

பதவி தந்தருளும் பால விநாயகர்

வல்லாளன் தன் நண்பர்களுடன் விளையாடுவதற்காக அந்த மாந்தோப்பிற்குள் நுழைந்தான். சுற்றும் முற்றும் கவனித்த வல்லாளன், ஒரு கருங்கல்லை பார்த்தான். அவன் முகம் பிரகாசமானது. ஓடிப் போய் அதைக் கையிலெடுத்தான். கல்லில் ஒட்டியிருந்த மண்ணை வாயால் ஊதித் துடைத்தான். ‘‘அட, இங்கப் பாருடா இது பிள்ளையார் சிலை மாதிரியே இருக்கு’’ என்று ஆச்சர்யக் குரல் கொடுத்தான். உற்சாகமான பாலர் கூட்டம், அதனை மாறி மாறி கையிலேந்தி பார்த்தது. ‘‘இன்னைக்கு பிள்ளையார் பூஜைதான் விளையாட்டு. நீ இந்த இடத்தை சுத்தம் செய். நீ போய் தண்ணீர் கொண்டுவா. எருக்கு மாலை தயார் செய்யறது உன் பொறுப்பு. நீங்க மூணு பேரும் வாத்தியம் வாசிங்க. நீங்க ரெண்டு பேரும் போய் பழங்கள பறிச்சிட்டு வாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லா வேலையையும் முடிச்சிடணும்…’’ மளமளவென கட்டளை இட்டான் வல்லாளன். மணல் பிராகாரம் தயாரானது. பச்சை மரக் கழியால் பந்தல் கட்டினார்கள். நிழலுக்காக மாவிலைகளை பந்தல் மேல் போட்டனர். செம்பருத்தி பூவால் சரங்கள் கட்டி தொங்கவிட்டார்கள். அறுபதே நிமிடத்தில் அந்த இடம் ஆலயமானது. கை, கால்களை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அமர்ந்த குழந்தைகள், விநாயகர் துதி சொன்னார்கள். கிழக்குச் சூரியன் பணிமுடித்துக் கொண்டு மேற்கே ஓய்வுக்குத் தயாரானான். குழந்தைகளோ விநாயகர் வழிபாட்டில் ஆழ்ந்திருந்தார்கள். தம் பிள்ளைகளை காணாது குழந்தைகளின் குடும்பங்கள் பரிதவித்தன.

குழந்தைகளை விளையாட அழைத்துச் சென்ற வல்லாளனின் பெற்றோரை திட்டித்தீர்த்தன. தந்தையார் கல்யாணம், அவமானத்தால் தலைகுனிந்தார். “நான் போய் உங்கள் பிள்ளைகளை தேடி அழைத்து வருகிறேன்’’ என்று உறுதி கூறினார். தோப்பினுள் கண் மூடி, கை கட்டி பிள்ளையாரை போற்றிப் பாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு, தன் மகன் தலைமையேற்றிருப்பதை பார்த்தார். இவனால் தானே அவமானம் என்று வல்லாளனை நையப்புடைத்தார். பந்தலை பிய்த்தெறிந்தார். தோரணங்களை அறுத்தெறிந்தார். மகனை பக்கத்திலிருந்த மரத்தில் கட்டிப் போட்டார். ‘‘அந்த புள்ளையாரே வந்து அவுத்துவிடுவாரு. அது வரைக்கும் இங்கயே கிட’’ என்று சொல்லி ஊர் பிள்ளைகளை அதட்டி அழைத்துச் சென்றார். தன்னை மூர்க்கத்தனமாய் அடித்த அப்பா மீது அவனுக்கு கடுங்கோபம். தன்னை அடித்ததுகூட பரவாயில்லை. ஆனால், கணேச வழிபாட்டை இழிவுபடுத்தியது தண்டனைக்குறிய குற்றம். இதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவன் மனது சொன்னது. உடனே மனதால் கணேசனை வணங்க தொடங்கினான். அந்த பிஞ்சு மனதுக்கு பதிலளிக்கும் விதமாக, அழகிய பாலகனாய் தோன்றிய விநாயகர், அவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டார். விநாயகரின் ஸ்பரிசத்தால் அடிபட்ட வடுக்கள் மறைந்தது.

வந்தவரை புரிந்து கொண்டு, அவர் பாதங்களை பற்றிக் கொண்டான், வல்லாளன். ‘‘விநாயகர் வழிபாடு சகல சம்பத்துக்களையும் தரும் என்பதை உன் வாழ்வு உணர்த்தும். அந்த வழிபாட்டுக்கு ஊறு விளைவித்த உன் தந்தையார் பார்வை இழந்து, தொழு நோயாளியாகி, அடுத்த பிறவியில் கர்மம் தொலைத்து என்னை வந்தடைவார். நீ தக்க தருணத்தில் கணபதி லோகம் வந்தடைவாய்’’ என்று வரமருளி மறைந்தார் விநாயகர். வீடுவந்து சேர்ந்த கல்யாணம், பார்வை இழந்தார். கதறி அழுத தாயாரைத் தேற்றிய வல்லாளன், நடந்ததைச் சொல்லி இருவரையும் அரவணைத்துக் கொண்டான். விவரமறிந்த ஊர் வல்லாளனிடம் மன்னிப்புக் கோரியது. அப்போது அங்கு தோன்றிய விநாயகர், ‘‘இந்த பாலகர்கள் வணங்கிய விநாயகர் இனி `வல்லாள கணபதி’ என்று அழைக்கப் படுவார்’’ என்றுகூற, தேவர்கள் பூமழை பொழிந்தனர்.

அந்த பிரதேசமே தெய்வீகத்தில் திளைத்தது. இது விநாயகர் புராணம் சொல்லும் கதை. இதே போன்று சிறுவர்கள் விளையாட்டாய் வைத்து விளையாடிய விநாயகர் இன்று பிரமாண்டமாய் கோயில் கொண்டு அருள்கிறார்.சென்னை – நந்தனத்தில், டர்ன்புல்ஸ் சாலையில் இருக்கிறது பால விநாயகர் கோயில். 1970களில் அந்த பகுதிவாழ் சிறுவர்கள் வைத்து விளையாடிய பிள்ளையார் சிலை, அப்பகுதி பெரியவர்களின் அன்பால், ஆன்மிக தெளிவால் அழகிய கோயில் கொண்டது. 1980ல் கும்பாபிஷேகம் கண்ட இக்கோயில், இன்று அற்புதமாக அமைந்திருக்கிறது. கோயில் அமைந்திருக்கும் அந்த தெரு, மரங்கள் சூழ அமைதியில் பொலிகிறது. மூன்று நிலை ராஜகோபுரம். கோயிலுள் தங்கமாய் தகதகக்கிறது கொடிமரம். அங்கிருந்து பிராகார வலம் வந்தால், அரச மரத்தடி விநாயகர், ராகவேந்திரர், சுதர்சனர், லட்சுமி சமேத நிவாசப் பெருமாள், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், லிங்கோத்பவர், சனீஸ்வரர், நவகிரகம், அனுமன் ஆகியோர் தனித் தனிச் சந்நதிகளில் அருள்பாலிக் கின்றனர். உற்சவர் மண்டபத்தில் உற்சவர்களின் வரிசை சிலிர்க்க வைக்கிறது. மூலவர் ஏகாம்பரேஸ்வரருக்கு அருகிலேயே, அன்று பிள்ளைகள் வைத்து வணங்கிய ஆதிவிநாயகர் இருக்கிறார். ஏகாம்பரேஸ்வரருக்கு வலப்புறம் பாலவிநாயகரும், இடது புறம் வள்ளி – தெய்வானை சமேத முருகப் பெருமானும் அருள் புரிகிறார்கள்.

பிள்ளைகளின் விளையாட்டாக தொடங்கப்பட்ட இக்கோயில், இன்று அப்பகுதி மக்களின் பரிகாரத்தலமாகவே மாறியுள்ளது. அமைதி, தூய்மை மேலோங்கி இருக்கும் இத்தலம் உருவாக காரணமான சிறுவர்கள் எல்லாம் இன்று நல்ல பதவிகளில் உள்ளதால் தாம் ‘உருவாக்கிய’ கோயில் மீது அவர்கள் கூடுதல் அக்கறையோடு இருக்கிறார்கள். அதனால் ஆலயம் பொலிவோடு திகழ்கிறது. தங்களின் சகல வெற்றிகளுக்கும் இவரது அருளே காரணம் என்று உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இந்த ஆலயத்தை தொழுவோர் அனைவருமே நம்புகிறார்கள்.

The post பதவி தந்தருளும் பால விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Bala Vinayagar ,Vallalan ,Valalan ,Bala Vinayakar ,Dinakaran ,
× RELATED முதற்படைவீடு