×

தர்பூசணி உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள்

ஜெயங்கொண்டம்: வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான நீர் மற்றும் சத்துக்களை கொடுக்கக்கூடியது தர்பூசணி இதை உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள். தர்பூசணியை, கார்த்திகை, தை மாதப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். எந்தப் பட்டத்தில் விதையை ஊன்றுகிறோமோ, அதற்கு முதல் மாதத்தில் நிலத்தைத் தயார்ப்படுத்த வேண்டும். 5 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு ஏக்கருக்கு 2 டிராக்டர் செறிவூட்டிய தொழுவுரத்தைக் கொட்டி, மீண்டும் ஒரு முறை உழவு செய்ய வேண்டும். ஓர் அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில், மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்தி எடுத்தவுடன், களைகளைக் கட்டுப்படுத்த மல்ச்சீங் ஷீட் (நிலப்போர்வை)அமைத்து, சொட்டு நீர்ப்பாசனத்தையும் அமைத்துவிட வேண்டும்.

பாத்தியில் ஒன்றேகால் அடி இடைவெளியில் ஒரு விதை ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 400 கிராம் விதை தேவை. 400 மி.லி ஜீவாமிர்தத்தில், விதையைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதற்குப் பிறகு 15 நிமிடங்கள் நிழலான பகுதியில் உலர வைத்து, ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். 5 முதல் 8 நாள்களில் விதையின் முளைப்பு தெரியும். 10-ம் நாளிலிருந்து, 15 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டுநீரில் கலந்து விட வேண்டும். 20 முதல் 25-ம் நாளுக்கு மேல் கொடி வீசிப் படரத் தொடங்கும். 15 மற்றும் 25-ம் நாளில், அதிக கிளைகள் வீசிப் பரவுவதற்காக 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அரப்புமோர்க் கரைசல் மற்றும் 100 மி.லி தேங்காய்ப்பால் கலந்து கொடியின் மீது தெளிக்க வேண்டும். 35 முதல் 40-ம் நாள்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.

அப்போது, 10 சென்ட் பரப்பளவுக்கு 4 மஞ்சள் அட்டை என்ற கணக்கில், ஒரு ஏக்கர் முழுவதும் 40 மஞ்சள்அட்டைகளைக் கட்டித் தொங்கவிட வேண்டும். இதில், பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும். சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, 35 மற்றும் 45-ம் நாளில், 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கரைசலுடன் 20 மி.லி, வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். தர்பூசணி வயலில்காய்களுக்கு வடிவம் கொடுக்கும் எருக்கன் 45-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அப்போது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ எருக்கன் செடி இலைகளைத் துண்டுதுண்டாக வெட்டி, ஒரு வாரம் ஊறவைத்து அதைச் சொட்டுநீரில் கலந்து பாய்ச்ச வேண்டும். இதனால், காய்கள் நல்ல வடிவத்தில் இருக்கும்.

50 மற்றும் 60-ம் நாள்களில் ஒரு சணல் சாக்கில் தலா 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்குப் போட்டு 200 லிட்டர் தண்ணீரில், ஊற வைக்க வேண்டும். அடுத்தநாள் காலையில், அதில் தலா ஒன்றரை லிட்டர் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஒரு லிட்டர் மீன் அமிலம் ஊற்றி, நன்கு கலக்கி சொட்டுநீர் மூலம் விட வேண்டும். 60 நாளுக்கு மேல் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். சந்தையில் தேவையைப் பொறுத்துத் தொடர்ந்து, 5 நாள்களுக்கு ஒரு முறையோ, 7 நாள்களுக்கு ஒருமுறையோ அறுவடை செய்யலாம்.

The post தர்பூசணி உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Karthikai ,Tai ,Dinakaran ,
× RELATED பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு