பெ.நா.பாளையம். ஜன.19: துடியலூர் அசோகபுரம் மற்றும் தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் 48 புதிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ராக்கிபாளையம் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியையும் நேற்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அதன்பின் அவர் பேசுகையில்,“காவலர்கள் வாகன சோதனையின் போது பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
வண்டியை நிறுத்தும் போது மன்னிக்கவும் என்றும், சோதனை முடிந்த பின் ஒத்துழைப்பிற்கு நன்றி. பயணம் சிறக்க வாழ்த்துகள் என்றும் பாசத்துடன் கூறி வழி அனுப்ப வேண்டும். சோதனை சாவடியை வேதனை சாவடியாக மாற்றி விடக்கூடாது’’ என்றார். இதைத்தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்தில் கேமரா பதிவை பார்வையிட்டார்.
இதில், துணை ஆணையாளர் சரவணகுமார், சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், ராஜேஷ், சரவணன், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஆறுச்சாமி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், துணை தலைவர் சண்முக சுந்தரம், மகளிர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி, அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், துணை தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் அசோக்குமார், முன்னாள் துணை தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post சோதனை சாவடியை வேதனை சாவடியாக்க கூடாது appeared first on Dinakaran.