×

தை பிறந்தால் வழி பிறக்கும்! கன்னியர் கழுத்தில் தாலி ஏறும்!!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

தை 05 (19-1-2024) சுக்கிரன், தனுர் ராசிக்கு மாறுதல்
தை 14 (28-1-2024) புதன், மகர ராசிக்கு மாறுதல்
தை 21 (4-2-2024) செவ்வாய், மகர ராசிக்கு மாறுதல்

“தை பிறந்தால், வழி பிறக்கும்!!” காலங்காலமாக, தீஞ்சுவை, தெய்வீகத் தமிழகத்தில், நிலவி வரும் மூதுரை இது! தேவர்களின் உலகங்களில், இரவு நேரம் முடிந்து, பகல் நேரம் ஆரம்பிக்கும் நேரமே இந்தத் தை மாதம்!! தட்சிணாயணம் எனப்படும், ஆறு மாத இரவு நேர காலம் முடிந்து, தேவர்களும், மகரிஷிகளும், கந்தர்வர்களும், ஜீவ சமாதிகளில், நிஷ்டையில் உள்ள மகான்களும், சித்த புருஷர்களும், தங்களுடைய தவ நிலை முடிந்து, புண்ணிய நதியான தேவ கங்கையில் நீராடி, சூரிய பகவானுக்கு அர்க்கியம் விடும் புனித நேரமே தை மாதப் பிறப்பாகும்!

பூவுலக வாழ்க்கை முடிந்து, கால தேவரின் உலகிற்கு செல்லும் மானிட ஜீவர்கள் “தட்சிணாயணம்” எனும் ஆறு மாத காலம் முடிந்து, தேவர்களின் பகல் நேரமாகிய “உத்தராயணம்” பிறக்கும் வரை, தேவர்கள் உலகின் “விரஜை” எனப் பூஜிக்கப்படும் மகத்தான புண்ணிய நதிக்கரையில், காத்திருக்க வேண்டும். தை மாதம் பிறந்தவுடன்தான், அவர்கள் அந்நதியைக் கடந்து, தேவர்களின் உலகமாகிய சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்!

நமது குழந்தைகள், திருமண வயதை அடைந்து, நல்ல வரனும் அமைந்து, விவாகம் நடைபெறும் அன்று, அதிகாலையிலேயே திருமண மண்டபத்தில் எழுந்தருளுவது, அக்னி, வருணன், வாயு ஆகிய தேவர்களும், மணமகன் – மணமகள் ஆகியோரின் முன்னோர்களும், அதிகாலையிலேயே திருமண மண்டபத்தில் எழுந்தருளியிருந்து, திருமணத்தை நடத்திவைத்து, ஆசீர்வதிப்பதாக புராதன ரகசிய கிரந்தங்கள் விவரித்துள்ளன. ஆதலால்தான் சென்ற காலத்தில், உத்தராயண காலத்தில் திருமணம் செய்விப்பதை விருப்பப்பட்டனர், பெரியோர்கள். இதுபோன்றே, முதியோர்களும், உத்தராயண காலத்தில், தங்களது வாழ்க்கை முடிவதை விரும்பினர். இத்தகைய தனிச் சிறப்பு இந்தத் தை மாதத்திற்கு உள்ளது! மேலும், திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியரும், தங்கள் மூதாதையரின் ஆசியினால், உத்தராயணப் புண்ணிய காலத்தில், தங்கள் மன விருப்பப்படி வரன் அமையும் என்று உறுதியாக நம்புகின்றனர்; அது உண்மையே!

சூரிய பூஜை!

சூரிய பகவானுக்கும், பூவுலக மக்களுக்கும், நெருங்கிய தொடர்பு உண்டு! ஆத்மகாரகன், பித்ரு காரகன். சரீரகாரகன், சருமத்திற்கு (skin) உரியவர் என்றெல்லாம் ஜோதிடக் கலையில் போற்றப்படும் சூரியனை , இந்தத் தை மாதத்தில்தான் விசேஷமாக பூஜிக்கிறோம். இம்மாதம் கொண்டாடப்படும் பொங்கல் தினத்தன்று, சூரியனுக்கு விசேஷமாக பொங்கலிட்டு பூஜிக்கின்றோம். தர்ம தேவதையின் அம்சமான, பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றையும் இந்தத் தைமாதத்தில்தான் சிறப்பாக பூஜிக்கின்றோம். பெரியோர்களின் ஆசி, நம் நல்வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து, “காணும் பொங்கல்” அன்று அவர்களை வணங்கி, அவர்கள் ஆசியையும் பெறுகிறோம்.

இத்தகைய தெய்வீகப் பெருமையும், சக்தியும் கொண்டுள்ள, இந்தத் தை மாதத்தின் விசேஷ, புண்ணிய தினங்களை இனி பார்ப்போம்!

தை 1 (15-01-2024) : தை மாதப் பிறப்பு உத்தராயணப் புண்ணிய காலம் – மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை. புதுப் பானையை அலங்கரித்து, முகூர்த்த நேரத்தில், பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, பூஜிக்க வேண்டும் (பொங்கல் புதுப்பானை வைக்க முகூர்த்த நேரம் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.)

தை 2 (16-01-2024) : மாட்டுப் பொங்கல். பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றை குளிப்பாட்டி, அலங்கரித்து, உணவளித்து, கற்பூர ஆரத்தி காட்டி, பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.
மேலும் அன்றைய தினம் சஷ்டி விரதம், விரதமிருந்து, முருகப் பெருமானைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். சஷ்டியன்று விரதமிருந்து முருகப் பெருமானை, பக்தி – சிரத்தையுடன் பூஜித்தால், பெண்களின் அகப் பையாகிய கருப்பையில் கரு உண்டாகும் என்பதையே, “சட்டியில் இருந்தால், தானே அகப்பையில்…!” என்று மருவியது.

தை 3 (17-01-2024) : காணும் பொங்கல். பெரியோர்களைக் கண்டு வணங்கி, அவர்களின் ஆசியைப் பெறவேண்டிய புனித தினம்.

தை 11 (25-01-2024) : தைப் பூசம். விரதமிருந்து, முருகப் பெருமானை பூஜிக்க வேண்டிய மகத்தான புண்ணிய தினம். வடலுாரிலுள்ள வள்ளலார் தர்ம ஞான சபையில் உள்ள ஏழு வண்ணத் திரைச்சீலைகள் விலக்கப்பட்டு, கண்ணாடிக்குப் பின் உள்ள ஜோதி தரிசனம் கண்டருளப்படும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லம் வாடிய வள்ளலாரை மனத்தால் வணங்கி, ஏழை – எளியோர்களுக்கு அன்னதானம் செய்வித்தால், மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்று, வாழ்வில் இக – பர சுகங்களைக் குறைவின்றி அனுபவிக்கலாம்.

தை 16 (30-1-2024) : பரம ஸ்ரீராம பக்தரான திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை தினம்.

தை 17 (31-1-2024) : திருவண்ணாமலை மகான், சேஷாத்திரி ஸ்வாமிகளின் ஜெயந்தி.

தை 19 (02-02-2024): ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி திருநட்சத்திரம். லட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை வைத்து, அரிசி மாவினால் கோலமிட்டு, நெய்தீபம் ஏற்றி வைத்து, வெல்லம், ஏலக்காய், சுக்குப் பொடி சேர்த்த பானகம் அமுது செய்வித்து, துளசி தளத்தால் அர்ச்சித்து, 9 முறை வலம் வந்து நமஸ்கரித்தால், இடர் ஏதுமில்லா நல்வாழ்வையும், ஏவல், பில்லி சூனியம் போன்றவற்றால் எவ்வித பாதிப்பும் நமக்கு ஏற்படாது.

தை 26 (09-02-2024) : தை அமாவாசை – மறைந்த பித்ருக்களை, (நம்முடைய மூதாதையர்) பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

தை 27 (10-02-2024) : மகா ஸ்நானம் ஆரம்பம். இன்றைய தினத்திலிருந்து, முப்பது நாட்களும், நதிகளில் நீராடவும், பரிகாரங்களைச் செய்வதற்கும் உகந்த நன்னாட்கள். இந்தநாட்களில் செய்யப்படும், பூஜைகளும், பரிகாரங்களும், வேதாத்யானமும், யோகாப்பியாஸமும் தொடங்கினால், பன்மடங்காகப் பெருகி, எண்ணிலடங்கா நற்பலன்களை அள்ளித் தர வல்ல சிலாக்கியமான நாள்.

தை 28 (11-02-2024) : “புவியில் ஜனித்துள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் குல தெய்வமாக இருந்து, அருள்பாலித்து வருவேன்!” என்று சத்திய பிரமாணம் செய்வித்து, இந்நாள் வரையில் சொன்ன சொல்லை விரதமாகக் கடைபிடித்துவரும், ஸ்ரீவாசவி தேவி அக்னி பிரவேசம் செய்து, அதனின்று ஜொலிக்கும் புடம் போட்ட – அக்னியிலிட்ட ஸ்வர்ணத்திற்கு இணையான பிரகாசத்துடன் ஆவிர்பவித்து, அனைத்து பக்தகோடிகளும் காணும் வண்ணம் அருள்பாலித்து, “அனைவரும், சத்தியத்தையும், தர்மத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்!” என்று உபதேசித்தருளிய, பார்வதி தேவியின் அம்சமான ஸ்ரீவாசவி தேவி, தனது அருட்கடாநசத்தைப் ெபாழிந்திட்ட புண்ணிய தினம். வாசவி தேவி அன்னையை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போர்க்கு, துன்பங்கள் அனைத்தும் அகலும்; சந்ததியினரின் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவிராது என்பது நிதர்சன உண்மையாகும். நினைத்தது யாவும் எவ்விதத் தடங்கலும் இன்றி, மனம்போல் நிறைவேறும்.

தை 29 (12-02-2024) : வரகுந்த சதுர்த்தி. இன்றைய தினத்தில், பிரதோஷ காலமாகிய மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக, சிவலிங்கத் திருமேனிக்கு, வெண்புஷ்பங்களால், வெண்தாமரை, மல்லிகை, முல்லை, வெண் சங்குப் பூக்கள், தும்பை மலர்களைக் கொண்டு அர்ச்சித்தாலும், தேன், கரும்புச்சாறு, பசும்பால், இளநீர், அரைத்த சந்தனத்தால், பக்தி – சிரத்தையுடன், அபிஷேகம் செய்வித்தாலும், சகலவிதமான விக்னங்களும், தடைகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும்; அனைத்து அபிலாஷைகளும் நிறைவேறி, உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் கண்கூடாகக் காண்பீர்கள்.

The post தை பிறந்தால் வழி பிறக்கும்! கன்னியர் கழுத்தில் தாலி ஏறும்!! appeared first on Dinakaran.

Tags : Tai ,Bhagwat Kaingarya ,Jyotita Sagara Chakravarti ,AMrajagopalan Tai ,Venus ,Mercury ,Capricorn ,Mars ,
× RELATED தர்பூசணி உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள்