×

சாம்பார் சாதத்தில் கிடந்த புழுக்கள்

சேலம், ஜன.7: சேலம் அத்வைதா ஆசிரம சாலையில் உள்ள ஓட்டலில் சாம்பார் சாதத்தில் புழு கிடந்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு ஓட்டலை மூடினர். சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாதத்தில் புழுக்கள் கிடந்தன. உடனே ஓட்டல் உரிமையாளரிடம் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு உரிமையாளர் முறையாக பதில் சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்த வாடிக்கையாளர், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை தொடர்புகொண்டு புகார் செய்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சுருளிராஜன் தலைமையிலான குழுவினர் அந்த ஓட்டலுக்கு சென்று உணவுகளை ஆய்வு செய்தனர். அதில் சாம்பார் சாதத்தில், புழுக்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து ஓட்டலில் இருந்த உணவுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பூச்சிகள் வராதவகையில் தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டு, எங்களுக்கு தகவல் அளித்து நாங்கள் வந்து ஆய்வு செய்த பிறகே ஓட்டலை திறக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஓட்டல் உடனடியாக மூடப்பட்டது. சாம்பார் சாதத்தில் புழுக்கள் கிடந்த இச்சம்பவம் அங்கிருந்த வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சாம்பார் சாதத்தில் கிடந்த புழுக்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Advaita Ashram Road ,Salem New Bus Station ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...