×

திருமாலையை அறிந்து “திருமாலை” அறிவோம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருமாலுக்கு உரிய ஒரு உயர்வான, உயிரான மாதம் இந்த மார்கழி மாதம். மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றே உரைத்து, மார்கழி மாதமாகவே நம்மோடு உறைகிறான் அல்லவா அந்த மாதவன்? இந்த மார்கழி மாதத்திற்கு எத்தனை எத்தனையோ ஏற்றங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு ஏற்றம், தம் பாமலைகளால் திருமாலை அடைந்த ஆண்டாள் போலவே தம் திருமாலை எனும் ஒப்பற்ற பிரபந்தத்தால், நாம் “திருமாலை” அடைய வழி காட்டித்தந்த தொண்டரடிபொடியாழ்வார் தோன்றியது இந்த மார்கழி மாத, கேட்டை நட்சத்திரத்தில்தான்.

பெருமாளின் வனமாலை அதாவது வைகுண்டத்தில், ஸ்ரீமந் நாராயணன் சதா சர்வ காலமும் சூட்டிக் கொண்டிருக்கும் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகவே அவதரித்தவர் தான் தொண்டரடிபொடியாழ்வார்.

“விஷ்ணு தர்மம்” என்ற ஒப்பற்ற நூலின் சாரமாகவே “திருமாலை”யின் 45 பாசுரங்களுமே கொண்டாடப்படுகிறது. இந்த கலியுகத்தில் எளிதாக நாம் அனைவருமே செய்யக்கூடிய ஒரே விஷயம் நாம சங்கீர்த் தனம்தான். பெருமாளின் திரு நாமாக்களை உச்சரித்து கொண்டே இருந்தால் போதும், அந்த திரு நாமாக்களே இம்மைக்கும், மறுமைக்குமான அத்தனை பேற்றினையும் பெற்று தந்துவிடும் என்று திருமாலையின் வழி திரும்பத் திரும்பத் நமக்கு சொல்லி தருகிறார் தொண்டரடிபொடியாழ்வார். 45 பாசுரங்களில் தொடக்கமாக வரும் முதல் 3 பாசுங்களில் அப்படிப்பட்ட உயர்வான திரு நாமாக்களை சொல்லி தாம் பெற்ற நற்பலன்களை நம்மோடு பகிர்கிறார்.

நான்காவது பாசுரம் முதல் 14ம் பாசுரம் வரை, திருநாமாக்களை சொல்லி திருமாலின் அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகுங்கள் என நமக்கு உபதேசம் செய்கிறார். 15-வது பாசுரம் முதல் 24ம் பாசுரம் வரை ஸ்ரீரங்கநாதர் தமக்கு செய்த அனுக்கிரகம் என்ன என்பதை அழகாக விளக்குகிறார், 25 முதல் 34ம் பாசுரம் வரை அந்த ரங்கநாதரை தாம் அடைவதற்கு தம்மிடம் எந்த தகுதியுமே இல்லை என்று அந்த பெருமாளிடமே விண்ணப்பிக்கிறார் ஆழ்வார், ஆழ்ந்த பக்தியோடு, 35 முதல் 37ம் பாசுரங்கள் வரை பகவானை அடைவதற்கு தகுதியே இல்லாதவன்தான் என ஆழ்வார் அரங்க நாதனை விட்டு விலகிப்போக, இவ்வாழ்வாரின் அதீத பக்தியை போற்றும் விதமாக பெருமாளே இவரை தன் பக்கம் சேர்த்து கொள்ள, அப்பெருமாளிடமே சரணாகதி செய்கிறார் தம் பாசுரங்களினால்..38 வது பாசுரத்தில் மிக ஆழமாக த்வய மந்திரத்தின் கருத்தையும், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லிய சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் தெரிவிக்கிறார், தெளிவிக்கிறார், ஆழ்வார்.

39-ஆம் பாசுரம் முதல் 44-வது பாசுரம் வரை, திருமாலின் திருநாமங்களை பாடி, பெருமாளை சரணாகதி செய்த அடியார்களின் பெருமைகளை பேசுகிறார். “காவல் இல் புலனை வைத்துக் கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து” என்று இந்த திருமாலையை தொடங்கும் தொண்டரடிபொடியாழ்வார் நமக்கு என்ன சொல்கிறார் தெரியுமா? “தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நம் புலன்களை அடக்ககூட முடியாமல் நாம் திருமாலின் திரு நாமங்களை சொல்லிவிட்டால்கூட போதும்.

அதை பெருமாள் பரிவோடு ஏற்றுக் கொள்வார். ஏற்றுக்கொண்டு நம் மீது ஏறி இருக்கும் பாவங்களை போக்கி விடுவார். அந்த பாவங்கள் என்பது தானாகவே பகவானின் திரு நாமாக்களை சொல்லும் போது விலகிவிடும். அரங்க மா நகருளானே, உன்னைவிட உன் திரு நாமமே மிகச்சிறந்தது என்று நீயே எனக்கு காட்டி தந்திருக்கிறாய் என ஆழ்வார் தம் முதல் பாசுரத்திலேயே சொன்னதை கேட்டு அந்த அரங்க மா நகரில், அரவணை மேல் பள்ளி கொண்டிருந்த ரங்கநாதர் மிகவும் சந்தோஷப்பட்டு, ஆழ்வாரே எம் திரு நாமத்தின் பெருமைகளை இவ்வளவு அழகாக எடுத்து சொன்னீரே உமக்கு நான் வைகுண்ட லோகத்தில் ஒரு இடம் தருகிறேன் என்று கூற அதற்கு ஆழ்வாரோ தம் அடுத்த பாசுரத்திலேயே,

“பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கா மா நகருளானே’’

என்று பெருமாளே, உன் திருநாமாக்களை மீண்டும்மீண்டும் சொல்லக்கூடிய பாக்கியத்தை, சுவையை மட்டுமேதான் நான் வேண்டி நின்றேன். எனக்கு இதை தவிர வேறு ஒன்றுமே வேண்டாம் என்கிறார். தொண்டரடிபொடியாழ்வார் காட்டி தந்த உயர்வான, எளிதான வழி இதுவே. ஆம், பகவானின் திரு நாமாக்களை மீண்டும்மீண்டும் சொல்லி கொண்டே இருப்போம். சம்சார பிணியிலிருந்து அதன் வழியே மீண்டு வருவோம்.

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

The post திருமாலையை அறிந்து “திருமாலை” அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirumal ,Madhavan ,Margazhi ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ