×

நிலையான வாழ்வளிப்பார் மலைக்கோட்டை பிள்ளையார்

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றின்மீது கட்டப்பட்ட கோட்டை. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன.

பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பின்னர் இவ்விடம் விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 14-ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விஜயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுனர்களாக செயல்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர்.

தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது. இம்மலையில் மூன்று நிலைகளில் கோயில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் மற்றும் இடையே தாயுமானவர் கோயில் ஆகியவை உள்ளன. இதைத்தவிர, பல்லவர் கால குடைவரை கோயிலும், பாண்டியர் கால குடைவரை கோயிலும் இம்மலையில் உள்ளன.

பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத்தொகுதிகளில் இது ஒன்று எனவும் கூறுவர்.

இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.

ராமாயணப் போருக்குப் பின்னர், ராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன்.

அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்துவிட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராகத் திகழ்கிறார்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post நிலையான வாழ்வளிப்பார் மலைக்கோட்டை பிள்ளையார் appeared first on Dinakaran.

Tags : Malaikottai Pillaiyar ,Tiruchirappalli Hill Fort ,Malaikotta ,Pillaiyar ,
× RELATED திருச்சியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு