×

25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் தலசயன பெருமாள் கோயிலில் கொடிமரம் சீரமைப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம், டிச.17: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதையொட்டி கொடிமரம் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடந்த 7ம் நூற்றாண்டில், மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட சிற்பங்கள், கடற்கரை கோயில் உள்ளிட்ட 7 கோயில்களை செதுக்கினர். இதில், 6 கோயில்கள் கடலில் மூழ்கியன. அதில், எஞ்சிய ஒரே கோயில் கடற்கரை கோயில். தொடர்ந்து, 14ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சி புரிந்த விஜய நகர மன்னர்களில் ஒருவரும், சிற்றரசருமான பராங்குச மன்னன், கடற்கரை கோயில் கடல் சீற்றத்தால் மூழ்கி விடுமோ என கருதி, கடற்கரை கோயில் உள் பகுதியில் உள்ள ஜலசயன பெருமாள் (பூமி சயன பெருமாள்) போன்ற தோற்றம் போல், அர்ஜூனன் தபசு சிற்பம் முன்பு கோயில் கட்டி சாமி சிலை வைத்தார். அதுமுதல் தலசயன பெருமாள் என இக்கோயில் அழைக்கப்பட்டு வருகிறது. அன்றில் இருந்து இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கடைசியாக, 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 25 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, கடந்த 2021ம் பாலாலயம் செய்தனர். உபயதாரர் குமார் என்பவர் மூலம் கோயில் திருப்பணி, கொடிமரத்தை சுற்றி கருங்கல் பதித்தல், மதில் சுவர், விமானங்கள் பழமை மாறாமல் புதுப்பித்தல், கோயில் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கோயில் பக்தர்களை கவரும் வகையில், போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொடி மரத்தின் தன்மை எப்படி உள்ளது என நேற்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

அப்போது கொடி மரத்தின் மீது உள்ள செப்பு தகடுகள் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு அதனை சரி செய்து, சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த, கொடிமரம் கடந்த 1994ம் ஆண்டு கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் மூலம் வனத்துறை அனுமதி பெற்று, நாகர்கோவில் பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு, 1998ம் ஆண்டு சிந்தாதிரிபேட்டை தச்சர்கள் மூலம் பொருத்தப்பட்டு, துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள், கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் தலசயன பெருமாள் கோயிலில் கொடிமரம் சீரமைப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Thalasayana Perumal ,Temple ,Department ,Mamallapuram ,Thalasayana Perumal temple ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்